/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தொழில் துறை முன்னேற்றத்துக்கு திட்டம் ஏதுமில்லை'
/
'தொழில் துறை முன்னேற்றத்துக்கு திட்டம் ஏதுமில்லை'
ADDED : பிப் 20, 2024 10:36 AM
ஈரோடு: தமிழக அரசு நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், 'தொழில் துறைக்கு மின் கட்டண உயர்வு என பல பிரச்னைகளுக்கு போராட்டம் நடந்து வரும் நிலையில், தொழில் துறை முன்னேற்றத்துக்கு தமிழக பட்ஜெட்டில் திட்டம் ஏதுமில்லை,' என பலரும் கருத்து தெரிவித்தனர்.
பல்வேறு துறை நிபுணர்கள் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பி.ரவிச்சந்திரன்: அரியலுார், பெரம்பலுார் உள்ளிட்ட வறட்சி மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் அறிவித்ததை வரவேற்கலாம். தொழில் துறைக்கான மின் கட்டண முரண்பாட்டை சரி செய்ய, 18 போராட்டம் நடத்தியும் பரிசீலிக்கவில்லை. தொழில் துறை முன்னேற்றத்துக்கான திட்டம் இல்லாததால், தமிழகம் பின்னோக்கி செல்கிறது. உ.பி.,யில், 18 லட்சம் கோடி ரூபாய்க்கு தொழில் துறையை ஈர்க்க முயன்றுள்ளனர். தமிழகத்தில் போர்டு கம்பெனி மூடப்பட்டது. அத்தொழில், வேலை வாய்ப்பு முடக்கத்தை சீரமைக்கும்படி மாருதி, டெஸ்லா நிறுவனங்களை அழைத்து வர முயற்சி இல்லை. காவிரி, வைகை ஆற்றில் பல கூட்டு குடிநீர் திட்டம் அறிவித்தாலும், அவற்றில் வறட்சி காலத்தில் தண்ணீர் செல்லாது. பிற மாநிலத்தை நம்பியே தண்ணீருக்கு உள்ள நிலையை மாற்ற, நீராதாரத்தை பலப்படுத்த திட்டம் ஏதுமில்லை. கடந்த பட்ஜெட்டில் ஈரோடு உட்பட பல இடத்துக்கு அறிவிக்கப்பட்ட ஐ.டி., பார்க்கின் நிலையே தெரியாத நிலையில், ஈரோடு, கரூர் உட்பட, 10 இடங்களில் மினி டெக்ஸ்டைல் பார்க் அறிவிப்பு பற்றி பிறகு பார்க்கலாம்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி: தமிழக பட்ஜெட்டில் புதுமை இல்லை. 3,000 புது பஸ் வாங்குவதாக கூறி உள்ளனர். அவற்றை சென்னைக்கே வழங்கி விடுவார்கள். பிற மாவட்டங்களுக்கு குறைவாக வழங்கி என்ன பயனும் இல்லை. சென்னையை மட்டுமே மையமாக வைத்து மெட்ரோ, புதிய பஸ்கள் என அறிவித்து நிதி ஒதுக்கி உள்ளனர். குடிசை இல்லாத தமிழ்நாடு என நிதி ஒதுக்கி உள்ளனர். கட்டி கொடுக்கும் வீடுகள் காலத்துக்கும் நிற்பதாக இருப்பதில்லை. இவை எப்படி பலன் தரும். சிறப்பு அம்சம் ஏதுமில்லை. பற்றாக்குறை பட்ஜெட்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் வ.பன்னீர்செல்வம்: தேர்தல் காலத்தில் அறிவித்தபடி, 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குதல், போக்குவரத்து துறையில் பணி செய்து ஓய்வு பெற்றோரின் அகவிலைப்படி வழங்க அறிவிப்பு ஏதுமில்லை. பூந்தமல்லி அருகே, 150 ஏக்கரில், 500 கோடி ரூபாயில் தொழில் நுட்பட வசதியுடன் கனவு தொழிற்சாலை அமைக்க அறிவிப்பு செய்த நிதி அமைச்சர், ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய உரிமை நிதியை வழங்காதது ஏமாற்றம்.
தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா: விபத்து இழப்பீடு தொகை, 1 லட்சத்தில் இருந்து, 2 லட்சமாக உயர்த்தியது, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 40 கோடி ரூபாயில், 100 படுக்கைகள் கொண்ட அதிநவீன தீவிர சிகிச்சை மைய அறிவிப்பு வரவேற்புடையது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவ, 1,557 கோடி ரூபாய் ஒதுக்கீடு, இல்லம் தேடி கல்விக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் வழங்குவது போல, தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்குவதும் வரவேற்கலாம்.
தமிழ்நாடு விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் கந்தவேல்: ஆட்டோமொபைல், பாதுகாப்பு போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி வளர்ச்சியை தக்க வைக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்க தொழில் நுட்ப ஜவுளி தொழில் கொள்கை சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இதன் கீழ், தொழில் நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழை துறைக்கு, 25 கோடி ரூபாயில் ஆராய்ச்சி மையம் அமைக்கும். ஜவுளித்துறைக்கான மானியம், 15ல் இருந்து, 25 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஈரோடு, கரூர் உட்பட 10 இடங்களில் தலா, 20 கோடி ரூபாயில் மினி டெக்ஸ்டைல் பார்க் அமைவதை வரவேற்கிறோம்.
ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க செயலாளர் பி.சுரேஷ்: கோவை மாவட்டத்தில் புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அவர்களுக்கு திறன் வழங்கிடும் வகையில் ஒரு தொழில் வளர் காப்பகம் ஏற்படுத்தப்படும், என்பது வரவேற்கலாம். தஞ்சை மாவட்டத்தில், 120 கோடி ரூபாயில் அமைய உள்ள தொழில் பூங்காவில் உணவு பொருள் பதப்படுத்துதல், தோல் அல்லாத காலணிகள் என மாசு ஏற்படுத்தாத தொழில்கள் அமைக்க முயற்சி மேற்கொண்டது சிறப்பானது.

