/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எழுதிய மரத்தையன் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
/
எழுதிய மரத்தையன் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுதிய மரத்தையன் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுதிய மரத்தையன் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED : பிப் 06, 2025 05:36 AM
பவானி: அம்மாபேட்டை அருகே, வெள்ளித்திருப்பூர் அடுத்த ஆலாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற எழுதிய மரத்தைய சுவாமி, ஆதி நாராயண பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தை மாத இறுதியில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு, கடந்த மாதம் 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 21ம் தேதி கொடியேற்றுதலும், 29ல் முதல் பூஜையும் நடந்தது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று பெருந்தேர் திருவிழா நடந்தது. இதில், மடப்பள்ளியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயர மகமேறு தேரில், எழுதிய மரத்தையன், ஆதிநாராயண பெருமாள் சுவாமியையும், பல்லக்கில் காமாட்சியம்மன் சுவாமியையும், பக்தர்கள் தோளில் சுமந்து, வனக் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். வழிநெடுக பக்தர்கள் மகமேறு தேருக்கு பூக்கள் துாவி தரிசனம் செய்தனர். இரண்டு தேர்களும் வனத்தை அடைந்தவுடன் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வரும், 12 வரை மூன்று சுவாமிகளும் வனத்தில் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். அன்று இரவு வனத்திலிருந்து சுவாமிகள் புறப்பட்டு, கோவிலில் சென்று விழா நிறைவடைகிறது. திருவிழாவில், ஆலாம்பாளையம், மாத்துார், வெள்ளித்திருப்பூர், மூலக்கடை, சங்கராப்பாளையம் மற்றும் அந்தியூர் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.