/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாலிபர் கொலை வழக்கில் மூவருக்கு காப்பு
/
வாலிபர் கொலை வழக்கில் மூவருக்கு காப்பு
ADDED : ஆக 08, 2025 01:09 AM
டி.என்.பாளையம், டி.என்.பாளையம், தாசப்பகவுண்டன்புதுார் அருகே மயானம் முன்புறம் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பங்களாபுதுார் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பர்கூர் அருகே மேலுார் சுண்டபூரை சேர்ந்த நாகராஜ், 26, என்பதும், அவருக்கு சித்ரா என்ற மனைவி, ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது,
கடந்த, 5ம் தேதி இரவு நாகராஜ், குன்றி பண்ணையத்துாரை சேர்ந்த பார்த்திபன் மற்றும் இருவர் என, 4 பேர் மது போதையில் டி.ஜி.புதுார் மயானம் அருகே சுற்றித்திரிந்ததை, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் பதிவானது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில், பார்த்திபன் என்பவரை போலீசார் பிடித்து, விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்ட நாகராஜ், குன்றியை சேர்ந்த பார்த்திபன், 26, சிவியார்பாளையம் கார்த்திகேயன், 19, டி.ஜி.புதுார் நால்ரோட்டை சேர்ந்த கவுதம், 21, ஆகிய நான்கு பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போது நாகராஜ், பார்த்திபனிடம் அவரது மனைவி மொபைல் நம்பரை கேட்டுள்ளார், இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன், நாகராஜை அருகில் கிடந்த டைல்ஸ் கல்லால் தலையில் அடித்துள்ளார், இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடன் இருந்த கார்த்திகேயன், கவுதம் ஆகியோர் சேர்ந்து மூங்கில் கட்டையால் நாகராஜை தாக்கியுள்ளனர். சிறிது நேரத்தில் நாகராஜ் சரிந்து விழுந்துள்ளார். மறுநாள் நாகராஜ் உயிரிழந்தது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
நாகராஜ் கொலை தொடர்பாக, நேற்று பார்த்திபன், கார்த்திகேயன், கவுதம் ஆகிய மூவரை பங்களாபுதுார் போலீசார் கைது செய்தனர்.