/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை புத்தாண்டு; போலீஸ் எச்சரிக்கை
/
நாளை புத்தாண்டு; போலீஸ் எச்சரிக்கை
ADDED : டிச 31, 2024 06:59 AM
ஈரோடு: ஈரோடு ப.செ.பார்க் பகுதியில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் டிச.,31ம் தேதி நள்ளிரவில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் ஈரோடு எஸ்.பி., ஜவகர் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்தாலோ, புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி டூவீலர்களை தாறுமாறாக ஓட்டினாலோ அவ்வாறான ஆட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்து, குற்ற நடவடிக்கை பாயும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி. அதன் பிறகு மக்கள் கலைந்து செல்ல வேண்டும். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.
மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட சோதனை சாவடிகளில், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு, வாகன சோதனை செய்வர். இதுதவிர மாவட்டத்தில் முக்கிய சாலை, சந்திப்பு பகுதிகளில், 80 இடங்களில் தற்காலிக செக் பாய்ண்ட் அமைக்கப்படவுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டமான இன்று (31) இரவு மட்டும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.