ADDED : ஆக 22, 2026 05:39 AM
சென்னிமலை:ஆவணி மாத மூல நட்சத்திர தினத்தில், பிட்டுக்கு மண் சுமந்து சிவபெருமான் பிரம்படிபட்ட திருவிளையாடல் புராண சம்பவத்தை மையமாக வைத்து, மதுரையில் பிட்டு திருவிழா நடைபெறும்.
இதேபோல் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், ஆண்டு தோறும் இதே நாளில் பிட்டு திருவிழாவாக விமரிசையாக நடக்கிறது. இந்த வருடம், 46வது ஆண்டாக நாளை விழா நடக்கிறது. இதையொட்டி அன்று காலை, 10:00 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை போல் அமைக்கப்பட்டு மதியம், 3:20 மணிக்கு கைலாசநாதர் அப்பாளுடனும், தேவியருடன் சுப்பிரமணிய சுவாமியும் சகடை தேரில் எழுந்தருள்வர். அங்கு தலைமை அர்ச்சகர் ஸ்ரீலஸ்ரீ ரமாநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜை நடத்த, ஓதுவார் மூர்த்தி ஆனந்த், சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்த பாடல்களை பாடி வழிபாடு நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை பிட்டு திருவிழா குழு தலைவர் ஜெயலட்சுமி பரமானந்தன் தலைமையில் நடக்கிறது.
