/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : டிச 26, 2024 01:23 AM
கோபி, டிச. 26-
கொடிவேரி தடுப்பணை வழியாக, அருவியாக தண்ணீர் கொட்டாததால், சுற்றுலா பயணிகள் நேற்று ஏமாற்றம் அடைந்தனர்.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதனால் குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். கொடிவேரி தடுப்பணை வளாகத்தில் உள்ள தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில், கடந்த 11 முதல், 2025 ஏப்.,9ம் தேதி வரை, 120 நாட்களுக்கு, இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீர் திறந்ததால், அதுமுதல் தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் தண்ணீர் வெளியேறவில்லை.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால், நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால், தடுப்பணை வழியாக தண்ணீர் அருவியாக கொட்டாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்ததுடன், வேறு வழியின்றி பவானி ஆற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் குளித்து சென்றனர். எனவே வரும் நாட்களில், பவானி ஆற்றில் வினாடிக்கு, 50 முதல், 100 கன அடி தண்ணீர் திறந்தால், அருவியில் குளிக்க வசதியாக இருக்கும் என, சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.