/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாரத்தில் 2 நாள் மட்டும் முட்டை விலை நிர்ணயம் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
/
வாரத்தில் 2 நாள் மட்டும் முட்டை விலை நிர்ணயம் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
வாரத்தில் 2 நாள் மட்டும் முட்டை விலை நிர்ணயம் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
வாரத்தில் 2 நாள் மட்டும் முட்டை விலை நிர்ணயம் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : நவ 06, 2025 01:36 AM
ஈரோடு, ''மாநில அளவில் முட்டை வியாபாரிகளை ஒருங்கிணைத்து, முட்டை உற்பத்தியாளர்களுடனும், தமிழக அரசிடமும் பேசி முன்பு போல வாரத்தில், 1 நாள் அல்லது, 2 நாள் மட்டும் விலை நிர்ணயித்து விற்கும் முறையை அமலாக்க கோருவோம்,'' என, தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு, ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன் கூறினார்.
ஈரோடு காளிங்கராயன் முட்டை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் பாரதி கோவிந்தசாமி தலைமையில், முட்டை வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழ கூட்டம் நடந்தது. செயலர் பாலுதங்கவேலு முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு பின், தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன், நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் சார்பில் முன்பு திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் முட்டை சந்தை நடத்தி விலை நிர்ணயம் செய்வர். நாங்கள் அந்நாளில் முட்டைக்கு பணம் செலுத்தி எடுத்து, அடுத்த, 3 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்றோம். தற்போது தினசரி சந்தை நடத்தி, தினமும் விலையை நிர்ணயிக்கின்றனர். விலை உயரும்போது, 5, 10, 15, 20, 40 காசு என படிப்படியாக உயர்கிறது. விலை குறையும்போது ஒரே நாளில், 40 காசு, 50 காசு என குறைகிறது.நாமக்கல்லில் லோடு எடுத்து அடுத்த நாள் விற்பனை செய்யும்போதே விலை மாறுவதால், விலையை குறைத்து கேட்கின்றனர். விற்க முடியவில்லை. கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம்.
தவிர முட்டை உற்பத்தி செய்யும் பண்ணைக்காரர்களே நேரடியாக வேன்களில் விற்பனை செய்வதாலும், சிறிய முட்டையை விற்பதாலும், முட்டை வியாபாரிகளால், 5, 10 காசு லாபம் கூட வைத்து விற்க முடியாமல் இழப்பை சந்திக்கிறோம். ஒரு லோடு லாரியில், 2.10 லட்சம் முட்டையை எடுப்போம். 40 காசு குறைந்தால், 80,000 ரூபாய் நஷ்டத்தை சந்திப்போம். எனவே மாநில அளவில் முட்டை வியாபாரிகளை ஒருங்கிணைத்து, முட்டை உற்பத்தியாளர்களுடனும், தமிழக அரசிடமும் பேசி முன்பு போல வாரத்தில், 1 நாள் அல்லது, 2 நாள் மட்டும் விலை நிர்ணயித்து விற்கும் முறையை அமலாக்க கோருவோம். பண்ணையாளர்கள் நேரடியாக விற்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துவோம்.
தென் மாவட்டத்தில், 1,800 முட்டை வியாபாரிகளை ஒருங்கிணைத்துள்ளோம். ஈரோடு மாவட்டத்தில், 300 பேருக்கு மேல் இணைந்துள்ளனர். இக்கூட்டத்தில் ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்ட வியாபாரிகள் வந்துள்ளனர். விரைவில் எங்கள் கோரிக்கையை அரசிடம் கொண்டு சென்று, தீர்வு காண்போம். இவ்வாறு கூறினார்.
மாவட்ட துணை செயலர் சுரேஷ், வெங்கடாசலம், துணை தலைவர் திருமூர்த்தி, இளங்கோ, சக்திசரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

