ADDED : மார் 07, 2024 02:30 AM
புன்செய்புளியம்பட்டி, மருமகனை, வேன் ஏற்றி கொல்ல முயற்சித்த போது, மொபட்டில் பின்னால் அமர்ந்து சென்ற அவரது தங்கை பலியானது, பவானிசாகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்த எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் சுபாஷ், 24. அதே பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். இவரது தங்கை ஹரிணி, 16. சத்தியமங்கலம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 8:00 மணியளவில் சுபாஷ் தனது தங்கை ஹரிணியை பள்ளியில் விடுவதற்காக, ஜூபிடர் மொபட்டில் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எரங்காட்டூர் நெசவாளர் காலனி அருகே சென்றபோது, மொபட்டின் பின்புறம் அதிவேகமாக வந்த சரக்கு வேன் மோதியது. இதில் அண்ணன், தங்கை இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் ஹரிணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சுபாஷுக்கு கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு, சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் சுபா ைஷ அனுமதித்தனர். தலையில் பலத்த காயமடைந்த ஹரிணி, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் உயிரிழந்தார். விபத்து குறித்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது;
சுபாஷ் கடந்த, 2023 அக்டோபரில் சத்தியமங்கலம் காந்திநகரை சேர்ந்த சந்திரன், 58, என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர் என்பதால், காதல் திருமணத்திற்கு சந்திரன் எதிர்ப்பு தெரிவித்து வந்ததோடு, அடிக்கடி சுபாஸுக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஆத்திரத்தில் இருந்த சந்திரன், சுபாஷை கொலை செய்யும் நோக்கத்தோடு, நேற்று சுபாஷ் தன் தங்கையுடன் மொபட்டில் சென்றபோது, சரக்கு வேனை சந்திரன் அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி சுபாஷை கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்துள்ளது.
இதில், எதிர்பாராத விதமாக சுபாஷின் தங்கை ஹரிணி பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து சந்திரனை, அவரது மனைவி சித்ரா அழைத்து சென்றுள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு கணவன், மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்,
இவ்வாறு கூறினர்.

