ADDED : அக் 10, 2026 06:10 AM
பவானி:பவானி அருகே மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். ஈரோடு மாவட்ட த.வெ.க, பொறியாளர் அணி அமைப்பாளர். கடந்த, 2026 தேர்தலில் பவானி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநில பொறுப்பாளருமான விஜய் வெங்கடேஷை, பாலகிருஷ்ணன் தவறாக பேசியதாக, அக்கட்சியினர் வாட்ஸ் ஆப் குரூப்பில் தகவல் பரவியது.
இது தொடர்பாக அவரிடம் விபரம் கேட்க விஜய் வெங்கடேஷ் ஆதரவாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், மாணிக்கம்பாளையத்துக்கு நேற்று வந்தனர். அவர் வீட்டில் இல்லாதாதல் வீட்டு முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பாலகிருஷ்ணனை கட்சியில் இருந்து நீக்குமாறு கோஷமிட்டனர். தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் கட்சி வெற்றி பெற்றதால், அதை கொண்டாடும் விதமாக அனைவரும் கலைந்து சென்றனர்.அ.தி.மு.க.,வில் இருந்த பாலகிருஷ்ணன், தவெகவுக்கு கட்சி மாறிய நிலையில், பவானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
