ADDED : ஆக 22, 2026 05:51 AM
ஈரோடு:பதினாறு
வகை செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியின் அருள் கிடைக்கவும்,
கணவரின் ஆரோக்கியம் மற்றும் தாலி பாக்கியம் நிலைப்பதோடு, இல்லத்தில்
செல்வம் பெருக, பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களில் ஒன்றான வரலட்சுமி
விரதம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி ஈரோட்டில் சுமங்கலி
பெண்கள் ஒன்றிணைந்து, வீடுகள், பொதுவான இடங்களில் சிறப்பு
வழிபாடுகளில் ஈடுபட்டனர். கலசத்தை பட்டாடையால் அலங்கரித்து,
பஞ்சலோக
லட்சுமி சிலையை அதில் வைத்து பாடல்கள் பாடி, தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
பிறகு
இனிப்பு பலகாரங்கள், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், சுண்டல்
உள்ளிட்டவற்றை படையலிட்டு பூஜை செய்தனர். பின் மஞ்சள் கயிறு வைத்து
வழிபட்டு கழுத்தில் அணிந்து கொண்டனர். சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள்,
குங்குமம், வளையல், வெற்றிலைப்பாக்கு, பூ, புடவையை பலர் தானமாக
வழங்கினர். வரலட்சுமி விரதத்தை ஒட்டி மாநகரில் பல்வேறு அம்மன்
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து
கொண்டனர்.
* வரலட்சுமி விரதத்தை ஒட்டி அந்தியூரில் அம்மன்
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிங்கார வீதி அங்காள
பரமேஸ்வரி அம்மனுக்கு, மாங்கல்ய சரடு அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்,
அபிஷேகம், பூஜை நடந்தது. பெண்கள் அம்மனுக்கு திருமாங்கல்ய சரடு
சாற்றி வழிபட்டனர்.
* பவானி பூக்கடை வீதி வாசவி கன்னிகா
பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து
பெண்கள் ஒன்றிணைந்து, வரலட்சுமி விரத பூஜை மேற்கொண்டனர். முன்னதாக
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பக்தி பாடல்கள் பாடினர்.
தொடர்ந்து பெண்கள் ஒருவருக்கொருவர் மாங்கல்ய கயிறு மற்றும்
வரலட்சுமி விரத நோன்புக்கயிறு கட்டிக் கொண்டனர்.
* கோபியில்
பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு
சிறப்பு அபிஷேகம் நடந்தது. மஞ்சள் சரடு சாற்றி, அர்ச்சனை செய்து, பூஜை
செய்து, பெண்கள் வழிபட்டனர்.
