ADDED : செப் 06, 2026 05:40 AM
ஈரோடு:அறிவு, திறமை, படைப்பாற்றல் மற்றும் புதிய சிந்தனைகளை விக்சித் பாரத் உருவாக்கும் முயற்சிக்கு, இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக்-2027 என்ற தேசிய அளவிலான இளைஞர் ஈடுபாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும், அவர்களின் புதிய சிந்தனைகள், கருத்துகள் மற்றும் திறமைகளை தேசக்கட்டமைப்பில் பயன்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கியநோக்கமாகும்.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக விக்சித் பாரத் வினாடி வினா ஆன்லைன் முறையில் வரும், 17ம் தேதி முதல் 30 வரை மை பாரத் இணையதளம் மூலம் நடக்கிறது. இதில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள். வினாடி வினாவை தொடர்ந்து கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டி நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், கல்வித்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தகுதியுடைய இளைஞர்களிடையே பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிகபட்ச இளைஞர் பங்கேற்பை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
