அத்திக்கடவு திட்ட குளங்களுக்கு சோதனை அடிப்படையில் தண்ணீர்
அத்திக்கடவு திட்ட குளங்களுக்கு சோதனை அடிப்படையில் தண்ணீர்
ADDED : அக் 28, 2026 05:18 AM
ஈரோடு: ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதியில் உள்ள, 1,045 குளம், ஏரி, குட்டைகளை நிரப்புவதற்காக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உருவானது. ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் வரும் உபரி நீர், காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ் நிலையில் இருந்து ஆண்டுக்கு, 1.5 டி.எம்.சி., நீரை, வினாடிக்கு, 250 கனஅடி வீதம், 70 நாட்களுக்கு பம்பிங் செய்து கொண்டு சேர்ப்பது திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்துக்கு ஆறு இடங்களில் நீரேற்று நிலையம் அமைத்து பம்பிங் செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், இத்திட்ட குளங்களுக்கு நீர் கொண்டு செல்ல முடியாமல் வறண்டன. கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் அத்திக்கடவு திட்ட குளங்களுக்கு சோதனை முறையில் நீரை பம்பிங் செய்யும் பணியை
துவங்கியுள்ளனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: போதிய மழை இல்லாததால் கடந்த ஜூலையில், 10 நாட்கள் மட்டும் குளங்களுக்கு தண்ணீர் வழங்க முடிந்தது. தற்போது கனமழையால் பவானி ஆற்றில் அதிக நீர் வரத்தாகி, இத்திட்டத்துக்கு தினமும், 80 கனஅடி வரை தண்ணீரை பம்பிங் செய்து, சோதனை அடிப்படையில் சில தேர்வு செய்யப்பட்ட குளங்களுக்கு வழங்கி வருகிறோம். இப்பருவத்தில் இதுவரை, 0.25 டி.எம்.சி., நீர் மட்டுமே எடுக்க முடிந்தது. இவ்வாறு கூறினர்.
