/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
/
பவானிசாகர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ADDED : ஆக 01, 2025 01:14 AM
பவானிசாகர், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகய, 15ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு அணை நீர்மட்டம், முன்னதாகவே, 100 அடியை எட்டி உபரி நீரும் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தரப்பில், முன்கூட்டியே தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் அணையில் இருந்து, நேற்று தண்ணீர் திறக்க அரசு தரப்பில் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அணையில் இருந்து, முதல்போக பாசனத்துக்கு, நேற்று மாலை, 6:50 மணி அளவில், அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கலெக்டர் கந்தசாமி மற்றும் அணைப்பிரிவு நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கான மதகுகளை திறந்து வைத்தனர். இதை தொடர்ந்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர் துாவினர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2,300 கன அடி வரை திறக்கப்படும். டிச., 12ம் தேதி வரை, 135 நாட்களுக்கு, 26.7 டி.எம்.சி.,க்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.
இதன் மூலம் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப் படை மதகு பாசன பகுதியில், ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
இவ்வாறு கூறினர்.