/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரியபெருமாள் கோவிலில் கல்யாண வைபோகம்
/
கரியபெருமாள் கோவிலில் கல்யாண வைபோகம்
ADDED : ஜன 01, 2026 04:47 AM

பவானி: அம்மாபேட்டை அருகே உள்ள, பூனாச்சி சமயதாரனுாரில் பழமைவாய்ந்த கரிய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அதிகாலை நாராயண பெருமாள் உடனமர் லட்சுமி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடந்தது.
நேற்று முன்தினம் காவிரியில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சீர்வரிசை, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அதிகாலை முதல் நாராயண பெருமாளுக்கு பால், பழம், தயிர், திருநீறு, சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மலர், துளசி அலங்காரம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண வைபோகம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர்.இதையடுத்து கரிய பெருமாள் கோவிலில் துவாதசி விருந்து நடந்தது. ஏகாதசி அன்று முதல் துவாதசி விரதம் இருந்த திருமணமாத பெண்கள், இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் இரவு முழுவதும் கரியபெருமாள் கோவிலில் பெருமாளின் நாமத்தை சொல்லியபடி கண்விழித்து திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்று விரதத்தை முடித்தனர்.
கல்யாணம் வைபவத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன.
* புன்செய்புளியம்பட்டி அடுத்த கீழ் முடுதுறை திம்மராய பெருமாள் கோவிலில், துவாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சப்பர வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர், 6:00 மணிக்கு உட்பிரகாரம் வழியாக வைகுண்ட வாசலுக்கு புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், வெளிப்பிரகாரம் வழியாக கோவில் உலா நடந்தது. இதில், ஸ்ரீதேவி-பூதேவி சமேத திம்மராய பெருமாள், கொண்டை கிரீட ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.

