/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் களைகட்டிய தேங்காய் சுடும் நிகழ்வு
/
மாநகரில் களைகட்டிய தேங்காய் சுடும் நிகழ்வு
ADDED : ஜூலை 18, 2025 01:36 AM
ஈரோடு, ஆடி மாத முதல் நாளை, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட மக்கள் தேங்காய் சுட்டு வரவேற்பது தொன்று தொட்டு நடக்கிறது. அதாவது மகாபாரத போர் ஆடி முதல் தேதி தொடங்கி, ௧௮ம் தேதி வரை நடந்தது.
இந்தப் போரில் தர்மம் வெல்ல பிரார்த்தித்து, மக்கள் பூஜை செய்து, தேங்காயை சுட்டு படைத்துள்ளனர். அதனால் இந்நிகழ்வு நடக்கிறது. மேலும் திருமணமான புது தம்பதியர், தங்கள் வாழ்வை சுவையாக தொடங்கவும், விவசாயம் செழிக்க-செல்வம் பெருக-ஆண்டு முழுவதும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியாக இருக்கவும், ஆடி மாத பிறப்பை, தேங்காய் சுட்டு மக்கள் வரவேற்பதாக பலவித தகவல் உலா வருகிறது.
இந்நிலையில் ஆடி மாத பிறப்பான நேற்று, ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில், தேங்காய் சுடும் பண்டிகை, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. பொது இடங்களில் தீ மூட்டி, அதில் தேங்காய் சுட்டு, விநாயகருக்கு ப(உ)டைத்து வழிபட்டனர். சில்லு சில்லாக சிதறியும், குச்சியோடு நின்று விட்ட ஆவி பறந்த தேங்காயை உடைத்தும் ரசித்து ருசித்தனர்.
ஈரோட்டில் அசோகபுரம், சுப்பிரமணிய கவுண்டர் வலசு வீதியை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் ஒன்று கூடி, வீடுகளின் முன் நெருப்பை பற்ற வைத்து தேங்காய் சுட்டனர். பின் அருகில் உள்ள கோவிலில் உடைத்து, உண்டு மகிழ்ந்தனர். இதேபோல் வீரப்பன்சத்திரம், சம்பத்நகர், பெரியண்ணா வீதி என மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், தேங்காய் சுடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடந்தது.