ADDED : மே 20, 2024 02:33 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதிகளான தாளவாடி, ஆசனுார், கடம்பூர் மற்றும் அந்தியூரில் கன மழை பெய்து வருகிறது. கோபி, பவானி, மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் ஈரோடு நகரில் அவ்வப்போது லேசனாது முதல், மிதமான மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில், நேற்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. ஈரோட்டில் பகலில் மிதமான வெயில் இருந்தாலும், அதன் வெப்ப நிலை, ௯௮ டிகிரி பாரன்ஹீட் அளவில் தொடர்கிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருண்டு காணப்பட்டது. 3:30 மணியளவில் இரவு நேரம் போல வானம் இருண்டு, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. லேசான காற்றுடன் மிதமாக பெய்யத் தொடங்கிய மழை, அரை மணி நேரம் நீடித்தது. அதன்பின் சாரல் மழையாக பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மொடக்குறிச்சியில், 2 மி.மீ., பவானிசாகர், 2.40, குண்டேரிப்பள்ளம், 2.60, எலந்தக்குட்டை மேடு, 3.80, தாளவாடி, 6.60, கோபி, 16.20 மி.மீ., மழை பெய்திருந்தது. வறட்டுப்பள்ளத்தில் அதிகபட்சமாக, 42 மி.மீ.,மழை பதிவாகியிருந்தது. மொத்த மழை அளவு, 75.60 மி.மீட்டராகவும், சராசரி மழையளவு, 4.45 மி.மீ., ஆக இருந்தது.
* அந்தியூர் அருகே பிரம்மதேசம், முனியப்பன்பாளையம், வேம்பத்தி, கூத்தம்பூண்டி, வெள்ளாளபாளையம், கரட்டுப்பாளையம், ஓசைபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று பெய்த மழையால், இதமான சூழல் நிலவியது.
* கோபியில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. பஸ் ஸ்டாண்டு சாலை, சத்தி சாலை, மொடச்சூர் சாலை, அத்தாணி சாலை, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சாரல் மழை பெய்தது. இதேபோல், கவுந்தப்பாடி, சலங்கபாளையம், கவுந்தப்பாடிபுதுார், பி.மேட்டுப்பாளையம், பெருந்தலையூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால், தெருக்களில் ஆங்காங்கே குட்டையாக மழைநீர் தேங்கி நின்றது.
* சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான கே.என்.பாளையம், கொமாராபாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, பண்ணாரி, ராஜன் நகர், தாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் லேசாக அடித்தது. பின்பு மாலை, 6:30 மணிக்கு சாரல் மழை பெய்தது.

