/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோடைக்கு முன்பே வறட்சி வெளியேறும் வன விலங்குகள்
/
கோடைக்கு முன்பே வறட்சி வெளியேறும் வன விலங்குகள்
ADDED : பிப் 15, 2024 09:05 PM
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதியில் மலை குன்றுகளில் புல்வெளிகளும், அவற்றுக்கு இடையே தாழ்வான பகுதியில், மரங்களும் நீர்நிலைகளுடன் கூடிய பசுமை வனப்பகுதிகளும் உள்ளன.
இந்த பசுமை வனத்தில், நீர் ஆதாரங்கள் நிறைய உள்ளன. இப்பகுதியில், வன உயிரினங்களுக்கு தடையின்றி உணவு, குடிநீர் கிடைத்து வருகிறது. வனவிலங்குகள், குறிப்பாக யானைகள், வெப்பம் அதிகம் உள்ள பகல் நேரத்தில் தாழ்வான வனப்பகுதியிலும், மற்ற நேரங்களில் புல்வெளிகளிலும் உலா வருகின்றன.
கோடையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உணவு, குடிநீர் தேடி யானைகள் உட்பட பல விலங்குகள் படையெடுக்கின்றன.
கோடை துவங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதியிலுள்ள மரங்கள் பசுமையை இழந்து கருகி வருகின்றன. கோடைக்கு முன்பே நீர்நிலைகள் வறண்டு வறட்சி துவங்கியுள்ளது.
மரங்கள், செடிகள் கருகியதால், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனத்தை சார்ந்து வாழும் யானைகள், போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை நாசம் செய்வது அதிகரித்துள்ளது.
இதைத் தடுக்க வனத்துறையினர், வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களிலும், குடியிருப்பை சுற்றி அகழி வெட்டியும் தீர்வு கிடைக்கவில்லை. வனப்பகுதியில் உள்ள குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டுவிட்டதால் அதில் நீர் நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.
பவானிசாகர் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பவானிசாகர் வனப்பகுதியை பொறுத்தவரை பல இடங்களிலும் அகழி வெட்டியும் கூட யானைகள் ஊருக்குள் வருகின்றன.
'வனவிலங்குகளுக்கான உணவு, குடிநீர் தேவையை வனத்திலேயே பூர்த்தி செய்ய வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் செயற்கையாக நீர் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'இதை செயல்படுத்தினால் மட்டுமே யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியும்' என்றனர்.