/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொங்கலுக்கு 40 நாட்களே உள்ள நிலையில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி தீவிரம்
/
பொங்கலுக்கு 40 நாட்களே உள்ள நிலையில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி தீவிரம்
பொங்கலுக்கு 40 நாட்களே உள்ள நிலையில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி தீவிரம்
பொங்கலுக்கு 40 நாட்களே உள்ள நிலையில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி தீவிரம்
ADDED : டிச 06, 2024 07:46 AM
ஈரோடு: பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி தீவிரமாக நடந்து வருவதுடன், பேக்கிங் செய்து அந்தந்த தாலுகாக்களுக்கு அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகள் மூலம், ரேஷன் கார்டுதாரர்கள், அந்தியோதையா அன்ன யோஜனா திட்ட பயனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர் போன்றோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும். இதற்காக நடப்பாண்டில், 1 கோடியே, 77 லட்சத்து, 22,995 வேட்டிகள், 1 கோடியே, 77 லட்சத்து, 64,471 சேலைகள் உற்பத்தி செய்ய திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும், 40 நாட்களே உள்ள நிலையில் சொசைட்டிகளின் கீழ் உள்ள விசைத்தறிகள் மூலம் உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுபற்றி, விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
நடப்பாண்டில், நீலம், சிவப்பு, பச்சை, பிரவுன், தீப்பெட்டி நிறம் உட்பட, 7 நிற பார்டருடன் வேட்டி உற்பத்தியாகிறது. மஞ்சள்-சிவப்பு, பச்சை-சிவப்பு, பச்சை-மஞ்சள், வெளிர் பச்சை-அடர் பச்சை, மஞ்சள்-நீலம் என, 12க்கும் மேற்பட்ட கலப்பு நிறங்களுடன் புடவை உற்பத்தியாகிறது. நுால் முழு அளவில் வரத்தானதால் உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை, 65 சதவீத வேட்டி, 40 சதவீத சேலை முழுமையாக உற்பத்தியாகி, ஈரோடு, வில்லரசம்பட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கூட்டுறவு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு, ஒவ்வொரு சேலை, வேட்டிகளின் தரத்தை பரிசோதித்து, நீளம், அகலம், 'டேமேஜ்' போன்றவற்றை ஆய்வு செய்து, பேக்கிங் செய்யப்படுகிறது.
அந்தந்த மாவட்ட தேவையை பெற்று அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. வேட்டி உற்பத்தி பணி முதலிலேயே துவங்கியதால், 65 சதவீத பணி நிறைவு பெற்றும், மேலும், 20 சதவீத வேட்டி உற்பத்தி செய்யப்பட்டு, நிறம் பிரித்து மடிக்கும் பணி நடந்து வருகிறது. அதுபோல, 40 சதவீத சேலை உற்பத்தி முடிந்து, பேக்கிங் சென்றாலும் கூடுதலாக, 20 சதவீத சேலைகள் மடிப்பு, தரம் பார்ப்பு போன்ற நிலைகளில் உள்ளன. வரும், 15 முதல், 20க்குள் வேட்டி உற்பத்தியை முடிக்கும் தறிகளில், சேலை உற்பத்தி துவங்கும். பொங்கல் பண்டிகையின்போது அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கும் வகையில் உற்பத்தியை தீவிரப்படுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.