/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் 1,800 அலுவலர்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் 1,800 அலுவலர்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் 1,800 அலுவலர்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் 1,800 அலுவலர்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : மார் 02, 2025 04:35 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் 1,800 அலுவலர்கள் ஈடுபட உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள, 139 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 18,752 மாணவ, மாணவியர் நாளை பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
இதற்காக மாவட்டத்தில், 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, வகுப்பறைகளை தயார் செய்யும் பணி நடக்கிறது. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கராபுரம் மற்றும் உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு தினத்தன்று காலை 6:00 மணி முதல், 26 வழித்தடங்களில் அனைத்து மையங்களுக்கும் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். மாணவர்கள் காலை 10:15 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வருகை புரிய வேண்டும். ஸ்மார்ட் வாட்ச், மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை, தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க, 1,300 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில், மூத்த முதுகலை ஆசிரியர்களை கொண்டு, 132 பறக்கும் படை அலுவலர்கள் சுழற்சி முறையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதியம் 1:15 மணிக்கு தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் வழித்தட அலுவலர்கள் மேற்பார்வையில், 52 விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மற்றும் உளுந்துார்பேட்டை பெஸ்கி ஆகிய இரு மேல்நிலைப்பள்ளிகளில் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார், 24 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மொத்தமாக 1,800 அலுவலர்கள் பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர்.