/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலர சைக்கிளில் வலம் வரும் தொண்டர்
/
அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலர சைக்கிளில் வலம் வரும் தொண்டர்
அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலர சைக்கிளில் வலம் வரும் தொண்டர்
அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலர சைக்கிளில் வலம் வரும் தொண்டர்
ADDED : மார் 11, 2025 05:18 AM

அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என சைக்கிளில் கொடியுடன், எம்.ஜி.ஆரின் 'உழைத்து வாழ வேண்டும்' என்ற பாடலை ஒலிக்க விட்டு திருக்கோவிலுார் பகுதியில் வலம் வரும் தொண்டர்.
திருக்கோவிலுார், வடக்கு வீதியைச் சேர்ந்தவர் ரகோத்தம்மன், 55; டீக்கடையில் கூலிக்கு டீ போடும் வேலை செய்து வருகிறார். இவர், தனது சைக்கிளிலில் அ.தி.மு.க., கொடியை கட்டிக்கொண்டு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நடித்த திரைப்பட பாடலை ஒலிக்கவிட்டு திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை, மணம்பூண்டி, அரகண்டநல்லுார் என தினந்தோறும் 10 கி.மீ., துாரத்திற்கு வலம் வந்து கொண்டுள்ளார்.
அப்போது, சினிமாவில் எம்.ஜி.ஆர்., தோன்றும் உருவத்தில் உடையை மாற்றி வலம் வருகிறார்.
அவர் கூறுகையில், கட்சியில் வார்டு அவை தலைவர் பதவியைத் தவிர எந்த ஒரு பலனையும் அடையாத அடிமட்ட ஏழைத் தொண்டன். எம்.ஜி.ஆர்.,க்காக அவர் காட்டிய ஜெ., வழியில், கட்சிக்காக பாடுபட்டு வந்தேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஆட்சி அமையும் வரை அவரது கொள்கை பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் ஓய மாட்டேன். கடந்த 10 மாதங்களாக எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், எம்.ஜி.ஆர்., பாடலை ஒலிக்க விட்டு வலம் வருகிறேன்.
எம்.ஜி.ஆர்., 'துாங்காதே தம்பி துாங்காதே' பாடலுக்கு சொந்தக்காரர். நாடோடி மன்னன் திரைப்படம் மூலம் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவர். ஏழை மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர். மக்களோடு மக்களுக்காக வாழ்ந்தவர்.
அவரை மறக்க இன்றளவும் மனம் மறுக்கிறது என்று ஆனந்தத்துடன் எம்.ஜி.ஆர்., பெருமையை புகழ்ந்தார்.
இதுவரை கட்சியில் எந்த பலனையும் அடையாத இதுபோன்ற தொண்டன் இருக்கும் வரை, ஜெ., சொன்னது போல், அ.தி.மு.க., வின் கொடி பறந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி என்கின்றனர் இவரை கண்டு மெய் சிலிர்க்கும் சக தொண்டர்கள்.