/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொதுமக்களை அச்சுறுத்திய கிணறு மூடல்
/
பொதுமக்களை அச்சுறுத்திய கிணறு மூடல்
ADDED : ஆக 26, 2024 05:18 AM

கள்ளக்குறிச்சி: நத்தாமூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்த பயன்பாடற்ற திறந்தவெளி கிணறு கலெக்டர் நடவடிக்கையால் மூடப்பட்டது.
உளுந்துார்பேட்டை தாலுகா, நத்தாமூர் நடுத்தெருவில் பயன்பாடற்ற நிலையில் திறந்தவெளி கிணறு இருந்தது. அப்பகுதி மக்கள் கிணற்றில் குப்பைகளை கொட்டினர். இந்த கிணறு உள்ள இடம் தனக்கு சொந்தமானது என 2 பேர் உரிமை கொண்டாடியதால் பிரச்னை இருந்து வந்தது.
இதையடுத்து, பயன்பாடற்ற திறந்தவெளி கிணற்றினை நிரந்தரமாக மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.
மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்பேரில், திருநாவலுார் போலீசார் மற்றும் உளுந்துார்பேட்டை தாசில்தார் அனந்தகிருஷ்ணன், துணை தாசில்தார் கனகபுரளி, வருவாய் ஆய்வாளர் வனிதா, வி.ஏ.ஓ., ராஜாஜி ஆகியோர் கிணற்றினை உரிமை கொண்டாடிய இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, சர்வேயர் வரவழைக்கப்பட்டு கிணறு உள்ள இடம் அளவீடு செய்யப்பட்டது. அதில், கிணறு உள்ள இடம் ரேவதி என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது.
இதையடுத்து ரேவதி ஒப்புதலின் பேரில், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி கிணறு நிரந்தரமாக மூடப்பட்டது.