/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் கொட்டுது பணமழை: உற்சாகத்தில் கட்சித் தொண்டர்கள்
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் கொட்டுது பணமழை: உற்சாகத்தில் கட்சித் தொண்டர்கள்
கள்ளக்குறிச்சி தொகுதியில் கொட்டுது பணமழை: உற்சாகத்தில் கட்சித் தொண்டர்கள்
கள்ளக்குறிச்சி தொகுதியில் கொட்டுது பணமழை: உற்சாகத்தில் கட்சித் தொண்டர்கள்
ADDED : ஏப் 09, 2024 05:58 AM
கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக இரு கட்சியினரும் பணத்தை தாராளமாக வாரி இறைத்து பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கும் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும் கிராமம் கிராமமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், சிவலிங்கம் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி கட்சியினரை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் மோகன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், ஜெயசங்கரன், நல்லதம்பி, சித்ரா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேல் பாபு, முன்னாள் எம்.பி., காமராஜ் ஆகியோரும் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இவர்களுக்கிடையே வசந்தம் கார்த்திகேயன் தம்பிகளான வேலு, கிஷோர் ஆகியோரும் நேரடியாக கட்சியினரை சந்தித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் குமரகுருவின் மகன் நமச்சிவாயம் கிளை வாரியாக சென்று நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.
நாளுக்கு நாள் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக பிரசாரத்தின் போது அதிகளவில் கூட்டத்தைக் கொண்டு வர ஆள் ஒன்றுக்கு தலா 200 முதல் 300 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.
அதேபோல் வேட்பாளருடன் சுற்றிவர பைக்குகளுக்கு பெட்ரோல் செலவுடன் சேர்த்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக இரு கட்சியினரும் தங்களின் கிளை மற்றும் வார்டு நிர்வாகிகளை நேரில் சந்தித்து 1000 முதல் 5000 ரூபாய் வரை கொடுத்து பணிகளை தொய்வடையாமல் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் அழைத்து தடபுடலான கவனிப்புடன் வாகன வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி தேர்தல் நெருக்கத்தில் வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' உள்ளது.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் வரும் 19ம் தேதி வரை பணமழை கொட்டி தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதால் அனல் (பணம்) பறக்கும் பிரசாரத்தால் கள்ளக்குறிச்சி தேர்தல் களம் சூடு பறக்கிறது
.-நமது நிருபர்-

