/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மிளகாய் பொடி துாவி மூதாட்டியிடம் நகை பறிப்பு
/
மிளகாய் பொடி துாவி மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : ஆக 14, 2024 06:27 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடியை துாவி நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் உண்ணா மலை, 80. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே வராண்டாவில் துாங்கிக் கொண்டிருந்தார்.
குடும்பத்தில் மற்றவர்கள் வீட்டிற்குள் துாங்கினர். நள்ளிரவு 12:00 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடியை துாவி, அவரது அணிந்திருந்த இரண்டு சவரன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியில் வர முயன்ற போது, கதவு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
கதவை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல இடங்களில் தேடியும் கொள்ளையர்கள் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப் பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.