/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கழிவுகளால் மாசுபடும் சித்தேரி நிலத்தடி நீர் விஷமாகும் அபாயம்
/
கழிவுகளால் மாசுபடும் சித்தேரி நிலத்தடி நீர் விஷமாகும் அபாயம்
கழிவுகளால் மாசுபடும் சித்தேரி நிலத்தடி நீர் விஷமாகும் அபாயம்
கழிவுகளால் மாசுபடும் சித்தேரி நிலத்தடி நீர் விஷமாகும் அபாயம்
ADDED : மார் 11, 2025 04:05 AM

கள்ளக்குறிச்சி : சித்தேரியில் கலக்கும் கழிவுநீர், கொட்டப்படும் குப்பை மற்றும் மாமிச கழிவுகளால், ஏரி நீர் மாசுபட்டு நிலத்தடி நீர் விஷமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, விளாந்தாங்கல் சாலை அருகே நகரின் மையத்தில், 25 ஏக்கர் பரப்பளவில் சித்தேரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு வரும், நீர் வரத்து வாய்க்கால்கள் முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிக்கிடக்கின்றன.
ஏரிக்கரை ஓரங்களில், ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு, தற்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக மாறி உள்ள நிலையில், அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், ஏரியில் கலக்கிறது. அதுமட்டுமின்றி, அங்கு பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இதனால் ஏரி நீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதையொட்டி, நிலத்தடி நீரும் விஷமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் 'போர்வெல்' அமைத்தால், அதில் கழிவுநீர் கலந்து, மாசடைந்த நீர் வருவதால், மக்களுக்கு உடல் உபாதைகளும் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஏரியில் குப்பை கொட்டப்படுவது தடுக்கப்பட்டு, தன்னார்வலர்கள் முயற்சியால், 100 டன்னுக்கு மேலான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி துார்வாரப்பட்டது.
பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், ஏரியில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதும், கழிவுநீர் கலப்பதும் தொடர் கதையாக இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.