/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி: சேகோ ஆலை துவங்க அரசுக்கு கோரிக்கை
/
மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி: சேகோ ஆலை துவங்க அரசுக்கு கோரிக்கை
மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி: சேகோ ஆலை துவங்க அரசுக்கு கோரிக்கை
மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி: சேகோ ஆலை துவங்க அரசுக்கு கோரிக்கை
ADDED : பிப் 26, 2025 05:12 AM
கல்வராயன் மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதார தொழில் விவசாயம். இப்பகுதியில் நெல், கரும்பு, வாழை, மக்காசோளம் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது.
மரவள்ளி இறவை முறை பாசனத்திற்கு மட்டுமின்றி, நீர் மேலாண்மை, முறையான சொட்டு நீர் மற்றும் சுழல் நீர் பாசன முறைக்கும் ஏற்ற பயிராக உள்ளது. அதனால் விவசாயிகளிடையே மரவள்ளி சாகுபடி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது கொல்லிமலை, கல்வராயன் மலை, தாளவாடி மலை போன்ற இடங்களில் அதிகம் விளைகிறது. குறிப்பாக கல்வராயன் மலையில் மரவள்ளியை, விவசாயிகள் மானாவாரி முறையில் சாகுபடி செய்து வருகின்றனர்.
விலை நிர்ணயம்
இங்கு தாய்லாந்து, மான்கொம்பு, குங்குமரோஸ் போன்ற மரவள்ளி ரகங்களை நடவு செய்து வருகின்றனர். கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன் மலையில் அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் ஆத்துார், தலைவாசல், நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்படும் சேகோ ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்படுகிறது.
இங்கு விளையும் மரவள்ளி கிழங்குகளில் மாவுச்சத்து அதிகளவில் உள்ளது. கிழங்கில் உள்ள மாவுச்சத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
விலை சரிவு
கடந்தாண்டு, மரவள்ளி டன் ரூ.14 ஆயிரத்திற்கு விலை போனது. அதனை நம்பி இந்தாண்டு கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன் மலை பகுதி விவசாயிகள், அதிகளவில் மரவள்ளி கிழங்கை பயிரிட்ட நிலையில், தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. டன் மரவள்ளி கிழங்கு ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே விலை போவதால், சாகுபடிக்கான செலவு தொகை கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
கோரிக்கை
மரவள்ளி கிழங்கை தனியார் ஆலைகள் மட்டுமே கொள்முதல் செய்வதால், அந்த ஆலை நிர்வாகமே விலையை நிர்ணயம் செய்கிறது. இதனால், ஆலை உரிமையாளர்களும் இடை தரகர்களுமே பயனடைகின்றனர். விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சார்பில் சேகோ ஆலையை துவங்கி, இப்பகுதியில் சாகுபடி செய்யும் மரவள்ளியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.