ADDED : மே 10, 2024 01:42 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி துவங்கியது.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை பகுதிகளில் இயங்கும் 49 பள்ளிகளில, 510க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மைதானத்தில் நடந்த ஆய்வின் போது, கலெக்டர் ஷ்ரவன்குமார் பள்ளி பஸ் ஒன்றினை ஓட்டிப்பார்த்தார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
ஆர்.டி.ஓ., லுார்துசாமி, மாவட்ட கல்வி அலுவலர் துரைராஜன், டி.எஸ்.பி., தேவராஜ், தாசில்தார் பிரபாகரன் உடனிருந்தனர்.
தொடர்ந்து, இருக்கைகள், அவசர வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளிட்ட 20 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து தகுதி சான்று வழங்கப்பட்டது.
நேற்று 352 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், குறைகளுடன் இருந்த 63 வாகனங்கள் மறுசீரமைப்பு செய்திட அறிவுறுத்தப்பட்டது.
வரும் 15ம் தேதி திருக்கோவிலுார் வட்டத்திற்கு உட்பட்ட 8 பள்ளிகளில் உள்ள 74 பஸ்கள் மாவட்ட ஆய்வு செய்யப்பட உள்ளது.
உளுந்துார்பேட்டை
உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்களின் பயன்பாட்டின் தரம் குறித்து ஆய்வு நடந்தது. ஆர்..டி.ஓ., கண்ணன் தலைமையில், தாசில்தார் விஜயபிரபாகரன், டி.எஸ்.பி., மகேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் 68 வாகனங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது வாகனங்களின் ஆயுட்காலம், உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் 5 வாகனங்களில் குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.