/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடத்திட வேட்பாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
/
ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடத்திட வேட்பாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடத்திட வேட்பாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடத்திட வேட்பாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
ADDED : மே 09, 2024 04:14 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடத்திட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்திற்கு முகவர்கள் நியமிப்பது தொடர்பாக, வேட்பாளர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷ்ரவன்குமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தல் கடந்த ஏப்., 19ல் முடிந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சின்னசேலம் வட்டம், அ.வாசுதேவனூர், மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணும் மையத்திற்கு சட்டசபை தொகுதி வாரியாகவும், அஞ்சல் ஓட்டுகள் எண்ணும் இடத்திலும், வேட்பாளர்கள் சார்பாக முகவர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, 14 மேஜைகளில் ஓட்டு எண்ணப்படுவதால், 14 முகவர்களும், அஞ்சல் ஓட்டுகள் 6 மேஜைகளில் எண்ணப்படுவதால் 6 முகவர்களும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு 1 முகவர் என, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 15 முகவர்களை 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக வேட்பாளர்கள் நியமிக்கலாம்.
நியமிக்கப்பட்ட முகவர்கள் ஜூன் 4ம் தேதி காலை 7:00 மணிக்கு அடையாள அட்டையுடன் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரவேண்டும். மையத்திற்குள் மொபைல் மற்றும் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. முகவர்கள் ஒதுக்கப்பட்ட மேஜையை விடுத்து, அடுத்த மேஜைக்கு பார்வையிட செல்வதோ, அடுத்த சட்டசபை தொகுதிக்கு செல்வதோ கூடாது.
ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக சந்தேகம் ஏற்படின், அம்மையத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே தங்களது கருத்துக்களை தெரிவித்திட வேண்டும். அஞ்சல் ஓட்டு சீட்டு எண்ணும் பணி முடிந்த பின்னரே ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுகள் எண்ணிக்கையின் கடைசி சுற்றுப்பணி முடிக்கப்படும். சட்டசபை, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்பு பிரிதிநிதிகள், பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், உறுப்பினர்களை முகவர்களாக நியமிக்கக் கூடாது.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வேட்பாளர்கள் பெறும்போது, வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணிக்கைப் பணியில் எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் நடக்காமல் அமைதியாக முடித்துத் தருவதற்கு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தகுந்த ஒத்துழைப்பினை அளிக்க வேண்டுமென' மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கர், சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லுார்துசாமி, கீதா உட்பட பலர் உடனிருந்தனர்.