/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் தெப்பக்குளம் சீரமைப்பு பணி...திட்டமிடல் இல்லாததால் பாதியில் நிற்கும் அவலம்
/
திருக்கோவிலுார் தெப்பக்குளம் சீரமைப்பு பணி...திட்டமிடல் இல்லாததால் பாதியில் நிற்கும் அவலம்
திருக்கோவிலுார் தெப்பக்குளம் சீரமைப்பு பணி...திட்டமிடல் இல்லாததால் பாதியில் நிற்கும் அவலம்
திருக்கோவிலுார் தெப்பக்குளம் சீரமைப்பு பணி...திட்டமிடல் இல்லாததால் பாதியில் நிற்கும் அவலம்
ADDED : மார் 11, 2025 05:41 AM

திருக்கோவிலூர் நகரின் நீர் மேலாண்மையை பாதுகாக்கும் வகையில் மன்னர் ஆட்சி காலத்தில் தீர்த்த குளம், தெப்பக்குளம் உருவாக்கப்பட்டன. இந்த கட்டமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சீரழிக்கப்பட்டு விட்டது.
மறைந்த முதல்வர் ஜெ.,புராதன நகரமாக அறிவித்து, தெப்பக்குளத்தை சீரமைத்து, குலத்திற்கு வரும் பாதாள கால்வாயை செப்பனிட நிதி ஒதுக்கி இருந்தார். ஆனால் ஒப்பந்ததாரர்கள் குளத்தில் இருந்த மண்ணை சுரண்டிவிட்டு கிளம்பி விட்டனர்.
குளத்தை சீரமைக்க கோரி பக்தர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் தேர்தல் வாக்குறுதியிலும் இது இடம்பெற்றது.
வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், குளம் சீரமைத்து, ஏரியிலிருந்து குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை பொறியாளர்கள் ஏரியிலிருந்து குளத்திற்கு செல்லும் பாதாள கால்வாய் தூர் வாருவது, தண்ணீர் கொண்டு செல்ல புதிய வழித்தடத்தை உருவாக்குவது என பல கோணங்களில் ஆய்வு செய்தனர்.
என்ன காரணத்தினாலோ திடீரென மாற்றி புதிதாக மார்க்கெட் வீதி வழியாக குழாய் புதைக்கப்பட்டு ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது, தெப்பக்குளத்தை சீரமைப்பது, நீராழி மண்டபத்தை கட்டுவதற்கு என திட்டம் மாற்றப்பட்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என 2023ம் ஆண்டு மே 4ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பூமி பூஜையுடன் பணிகள் துவங்கப்பட்டன.
தெப்பக்குளத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டதுடன் பணிகள் அப்படியே உள்ளது.
நீராழி மண்டபத்திற்கான கருங்கல் பணிகள் நடந்து வரும் நிலையில், ஏரியிலிருந்து குளத்திற்கு தண்ணீர் செல்லும் புதிய வழித்தடத்தில் பைப் லைன் புதைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய திட்டத்தின்படி மதகின் மூலமாக தண்ணீர் கொண்டு செல்ல முடியாது. புதிய வழிதடத்தை உருவாக்க வேண்டும். இதற்கு நீர்வளத்துறை, ஏரியின் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்க மறுக்கிறது. மதகு மூலமே தண்ணீரைக் கொண்டு வந்து ஏரிக்கு அருகில், நிழற்குடை அருகே சம்ப் அமைத்து, அங்கிருந்து மோட்டார் மூலம் பம்ப் செய்து குழாய் வழியாக தண்ணீரை குளத்திற்கு கொண்டு செல்லலாம் என சமீபத்தில் அறநிலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு முடிவு செய்துள்ளனர்.
இதற்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
திட்டப்பணிக்கான செலவினத்தை குறைக்கும் வகையில், ஏற்கனவே உள்ள பாதாள கால்வாயை ஒரு சில லட்சங்களில் தூர்வாரி, ஒரு சில இடங்களில் இருக்கும் அடைப்பை, ஆக்கிரமிப்பை அகற்றி சரி செய்து விட்டால் பழமை மாறாமல் குளத்திற்கு எளிதில் தண்ணீர் சென்று விடும். குளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் செல்ல வேண்டுமென்றால், பழைய திட்டத்தையே புதுப்பிப்பதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்ற நிலையில், குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் சாத்தியமில்லாத திட்டத்தை கைவிட்டு பாதாள கால்வாயை புதுப்பிக்க வேண்டும்.