முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?: கிராம மக்கள், விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு
முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?: கிராம மக்கள், விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 20, 2026 12:39 PM
ADDED : ஜூன் 19, 2026 08:32 PM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிப்பட்டு - புதுப்பட்டு இடையே முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர் மட்டபாலம் இல்லாததால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகே பவுஞ்சிப்பட்டு விவசாயம் நிறைந்த கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி குமாரமங்கலம், லக்கி நாயக்கன்பட்டி காட்டுக்கொட்டாய், பவுஞ்சிப்பட்டு காட்டுக்கொட்டாய் ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம், நெல், கரும்பு, மணிலா, கேழ்வரகு, கம்பு, மரவள்ளி கிழங்கு, கோலியஸ் கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அப்பகுதி சேர்ந்த விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்து புதுப்பட்டு, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். விவசாய விலை பொருட்களை டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லும் நிலையில், நீண்ட துாரம் சுற்றி செல்வதற்கு சிரமப்பட்டு அப்பகுதியில் பவுஞ்சிப்பட்டு - புதுப்பட்டுக்கு இடையே உள்ள முஸ்குந்தா ஆற்றை கடந்து செல்கின்றனர்.
மழைக் காலங்களில் முஸ்குந்தா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது 15 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து பல போராட்டங்களையும் நடத்தியும் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
மழைக் காலங்களில் பள்ளி மாணவர்கள் பலர் புதுப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல ஆபத்தான வகையில் புத்தக பையை தலையில் வைத்துக் கொண்டு ஆற்று தண்ணீரில் நீந்தி அக்கரைக்கு செல்கின்றனர். இதற்கிடையே மாணவர்கள் ஆற்றை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவும் போது அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு சென்று விடுகின்றனர்.
ஆனால் அதன்பின் உயர்மட்டம் பாலம் கட்டுவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்வதில்லை. இந்நிலையில் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் அப்பகுதியில் கட்டாயம் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டார். அதில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்று கிராம மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றின் இரு கரைகளிலிருந்து கிராம பகுதிகளுக்கு செல்வதற்கு சாலைகள் அமைத்துள்ள நிலையில், ஆற்றின் குறுக்கே மட்டும் இதுவரை பாலம் அமைக்ககாமல் உள்ளது. எனவே, பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர் மட்டம் பாலம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
