/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் புறவழிச்சாலையுடன் இணையும் வகையில் வெளிவட்ட சாலை அமைக்கப்படுமா?
/
திருக்கோவிலுார் புறவழிச்சாலையுடன் இணையும் வகையில் வெளிவட்ட சாலை அமைக்கப்படுமா?
திருக்கோவிலுார் புறவழிச்சாலையுடன் இணையும் வகையில் வெளிவட்ட சாலை அமைக்கப்படுமா?
திருக்கோவிலுார் புறவழிச்சாலையுடன் இணையும் வகையில் வெளிவட்ட சாலை அமைக்கப்படுமா?
ADDED : மே 28, 2024 11:17 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத்துறை வெளிவட்ட சாலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருக்கோவி லுார் எதிர்காலத்தில் வளமான கட்டமைப்புகள் கொண்ட ஒரு மாநகராட்சியாக உருவெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. ரயில் நிலையம், மார்க்கெட் கமிட்டி, அரசு போக்குவரத்து கழக பணிமனை என திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் மாவட்ட எல்லைக்கு பிரிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் சேர்வதன் மூலம், மாவட்ட தலைமையிடமாகவும் மாறும் சூழல் உள்ளது.
இந்நிலையில் நகரில் தற்பொழுதே போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக திருக்கோவிலுார் சர்க்கரை ஆலைக்கு விழுப்புரம் மாவட்டம் முகையூர், கண்டாச்சிபுரம் பகுதிகளில் இருந்து கரும்புகளை ஏற்றி வரும் டிராக்டர்களால் அரகண்டநல்லுார் , மணம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் குறுகலான பாதை கொண்ட அரகண்டநல்லுாரில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக மார்க்கெட் கமிட்டி பகுதியில் பல நாட்கள், இரவு முழுவதும் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது.
இக்குறையைப் போக்க திருக்கோவிலுாருக்கு செல்ல வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு பல ஆண்டுகளாக முன்வைக்கின்றனர்.
அதாவது, அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக்கில் இருந்து அந்திலி வழியாக தென்பெண்ணை ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து ஆவியூர், கொளப்பாக்கம் வழியாக திருக்கோவிலுார் புறவழிச் சாலையில் இணைக்கவும். அதேபோல் அரகண்டநல்லுார் பாலிடெக்னிக்கில் இருந்து தேவனுார் , மணம்பூண்டி வழியாக தபோவனம் புறவழிச் சாலையை இணைப்பதன் மூலம் திருக்கோவிலுார் நகரில் பெரும் அளவிலான போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.
இதன் காரணமாக சர்க்கரை ஆலை, மார்க்கெட் கமிட்டிக்கு செல்லும் விவசாயிகள் பயனடைவார்கள். அரகண்டநல்லுாரிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிட்டும். நெடுஞ்சாலை துறையின் சிந்தனையில் இருக்கும் இத்திட்டம் செயல்வடிவம் பெறுவதன் மூலம் திருக்கோவிலுாரின் அடிப்படை கட்டமைப்பு மேம்படும்.