கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே தொழிலாளி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி தாலுகா, ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி மகன் வேலாயுதம்,55; கிணற்றில் கருங்கல் கட்டும் வேலை செய்கிறார். இவர், கிணற்றில் கருங்கல் கட்டி தருவதற்காக அதே பகுதியை சேர்ந்த பலரிடம் பணம் வாங்கிய நிலையில், வேலை செய்யாமல் இருந்துள்ளார்.
பணம் கொடுத்த நபர்கள் வீட்டிற்கு சென்று வேலாயுதத்திடம் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த வேலாயுதம் கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் வேலாயுதத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில், உடையநாச்சி மணிமுக்தாறு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பதாக நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
அதில், புங்க மரத்தில், லுங்கியில் துாக்கிட்டு அழுகிய நிலையில் வேலாயுதத்தின் உடல் இருந்தது தெரிந்தது. இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.