ADDED : டிச 01, 2025 05:18 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ஆடு திருடிய தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரின் மகன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 46; விவசாயி. இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 22ம் தேதி இரவு வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளில் ஒன்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருடுபோன ஆட்டை குமார் தேடியபோது, மடப்பட்டில் உள்ள சந்தையில் ரூ. 7 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது.
அப்போது வியாபாரி ஒருவர் இரு நபர்கள் மீது சந்தேகப்பட்டு எடுத்து வைத்திருந்த போட்டோவை காட்டிய போது, தனது ஆட்டை திருடியது இவர்தான் என குமார் உறுதி செய்தார்.
குமார் புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ப்ரீத்தா மற்றும் போலீசார் ஆடு திருடிய உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துார் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெற்றிவேல், 20; கலைமணி மகன் திவாகர், 20 ; ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள் ஆடு திருடியடைத ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
இதில் வெற்றிவேலின் தந்தை ஆறுமுகம், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

