/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்கள் நல பணியாளர், தொழிலாளியிடம் ரூ.2.12 லட்சம் ஆன்லைனில் மோசடி கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்
/
மக்கள் நல பணியாளர், தொழிலாளியிடம் ரூ.2.12 லட்சம் ஆன்லைனில் மோசடி கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்
மக்கள் நல பணியாளர், தொழிலாளியிடம் ரூ.2.12 லட்சம் ஆன்லைனில் மோசடி கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்
மக்கள் நல பணியாளர், தொழிலாளியிடம் ரூ.2.12 லட்சம் ஆன்லைனில் மோசடி கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்
ADDED : செப் 22, 2024 06:06 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மக்கள் நலப் பணியாளர் மற்றும் கூலித் தொழிலாளி ஆகியோரிடம் 2.12 லட்சம் ரூபாய் ஆன்லைனில் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 46; மக்கள் நலப் பணியாளர். இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு மொபைல் எண்ணில் இருந்து லோன் தொடர்பாக மெசேஜ் வந்துள்ளது.
கிருஷ்ணமூர்த்தி அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது, குறைந்த வட்டியில் 5 லட்சம் ரூபாய் தருவதாக தெரிவித்ததுடன், அவரது வங்கி கணக்கு விபரங்களை பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, லோன் வழங்க டாக்குமென்ட் சரிபார்ப்பு மற்றும் அப்ரூவலுக்கென தொகை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி 6 தவணைகளில், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.
ஆனால், இதுவரை கிருஷ்ணமூர்த்திக்கு லோன் வழங்கவில்லை. மேலும், அந்த நம்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஒரு மோசடி வழக்கு
கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 38; விவசாய கூலித் தொழிலாளி. இவர், சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் பணிபுரிந்து, சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
மீண்டும் வெளிநாடு செல்ல வேலை தேடினார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் சமூக வலைதளத்தில், வெளிநாடு வேலை தொடர்பாக வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, இஸ்ரேல் நாட்டில் வேலை இருப்பதாக கூறி ராஜமாணிக்கத்தின் பான் கார்டு, ஆதார் விபரங்களை மர்ம நபர் பெற்றுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு ராஜமாணிக்கத்தை தொடர்பு கொண்ட மர்மநபர் வேலை கிடைத்து விட்டதாக தெரிவித்து டிக்கெட் சார்ஜ் உட்பட பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்டுள்ளனர்.
இதை நம்பிய ராஜமாணிக்கம் 5 தவணைகளில் 80 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து, இதுவரை விசா கிடைக்கவில்லை. அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இது குறித்து நேற்று முன்தினம், ராஜமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.