/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் காயம்
/
தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் காயம்
ADDED : நவ 02, 2025 04:14 AM
சங்கராபுரம்: புதுப்பாலப்பட்டு கிராமத்தில் 4 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணாபுரம் அடுத்த அரியலுார் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ். இவர் தனது குடும்பத்தினருடன் சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நேற்று, நாகராஜின் மகன் விதுன்ராஜ், 4; தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் திரிந்த தெரு நாய்கள் விதுன்ராஜை கடித்து குதறியது.
உடன், அப்பகுதியினர் நாய்களை விரட்டியடித்து, காயமடைந்த சிறுவனை சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் நடந்து மற்றும் பைக்கில் செல்லும் பொதுமக்களை துரத்தி, கடிக்கிறது.
எனவே, சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 5 மாணவர்கள் நாய் கடியால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

