/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 84,329 வாக்காளர்கள் நீக்கம்: பெயர் சேர்க்க ஜன., 18 வரை காலக்கெடு நிர்ணயம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 84,329 வாக்காளர்கள் நீக்கம்: பெயர் சேர்க்க ஜன., 18 வரை காலக்கெடு நிர்ணயம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 84,329 வாக்காளர்கள் நீக்கம்: பெயர் சேர்க்க ஜன., 18 வரை காலக்கெடு நிர்ணயம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 84,329 வாக்காளர்கள் நீக்கம்: பெயர் சேர்க்க ஜன., 18 வரை காலக்கெடு நிர்ணயம்
ADDED : டிச 20, 2025 07:14 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் 84,329 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி நிலவரப்படி, உளுந்துார்பேட்டை தொகுதியில் 3,04,887 வாக்காளர்கள், ரிஷிவந்தியம் 2,82,881, சங்கராபுரம் 2,80,376, கள்ளக்குறிச்சி 2,92,463 என 11 லட்சத்து 60 ஆயிரத்து 607 வாக்காளர்கள் இருந்தனர்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி கடந்த நவ., 4ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில் உள்ள 1,275 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சேகரித்து அதை பி.எல்.ஓ., எனப்படும் செயலியில் பதிவேற்றம் செய்தனர். இப்பணிகள் கடந்த 14ம் தேதி முடிந்தன.
இதையடுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் பிரசாந்த் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டார்.
அப்போது, டி.ஆர்.ஓ., ஜீவா, தேர்தல் தாசில்தார் பரந்தமான் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்., தே.மு.தி.க., வி.சி., நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் உடனிருந்தனர். இதில், இறந்தவர்கள், வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள், இருமுறைப்பதிவு, கண்டறிய முடியாதவர்கள் என வாக்காளர் பட்டியலில் இருந்து 84,329 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பிறகு உளுந்துார்பேட்டை தொகுதியில் ஆண்கள் 1,44,380, பெண்கள் 1,42,987, மூன்றாம் பாலினத்தவர்கள் 46 என மொத்தமாக 2,87,413 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், ரிஷிவந்தியம் தொகுதியில் ஆண்கள் 1,31,734, பெண்கள் 1,30,780, மூன்றாம் பாலினத்தவர்கள் 50 என மொத்தம் 2,62,564 வாக்காளர்களும், சங்கராபுரம் தொகுதியில் ஆண்கள் 1,26,899, பெண்கள் 1,29,216, மூன்றாம் பாலினத்தவர்கள் 46 என மொத்தம் 2,56,161 வாக்காளர்களும், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் ஆண்கள் 1,33,614, பெண்கள் 1,36,458, மூன்றாம் பாலினத்தவர்கள் 68 என மொத்தமாக 2,70,140 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆண்கள் 5,36,627, பெண்கள் 5,39,441, மூன்றாம் பாலினத்தவர்கள் 210 என மொத்தமாக 10 லட்சத்து 76 ஆயிரத்து 278 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டவர்களின் பட்டியல்கள் ஆர்.டி.ஓ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் பி.டி.ஓ., அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் வைக்கப்படும். மேலும், https://www.elections.tn.gov.in/, https://voters.eci.gov.in/ மற்றும் https://kallakurichi.nic.in/ ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் மற்றும் 2026ம் ஆண்டு ஜன.,1ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்த முதல்முறை வாக்காளர்கள் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பிக்கலாம். பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகள் ஜன., 18ம் தேதி வரை சம்மந்தப்பட்ட தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 கோரிக்கை அல்லது ஆட்சேபனை படிவங்களை சமர்ப்பிக்கலாம். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது பிப்., 10ம் தேதி வரை விசாரணை மேற்கொள்ளப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

