/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம்; வரும் 16ம் தேதி முதல் துவங்கி நடத்த முடிவு
/
மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம்; வரும் 16ம் தேதி முதல் துவங்கி நடத்த முடிவு
மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம்; வரும் 16ம் தேதி முதல் துவங்கி நடத்த முடிவு
மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம்; வரும் 16ம் தேதி முதல் துவங்கி நடத்த முடிவு
ADDED : டிச 12, 2024 07:10 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு வரும் 16ம் தேதி கோமாரி தடுப்பூசி செலுத்த கால்நடைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் மூலம் கிடைக்கும் பாலினை விற்பனை செய்தும், பன்றி, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து, சந்தைகளில் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டுகின்றனர். இதில், மாடுகள் கோமாரி நோயால் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. நோய் பாதித்த விலங்குகளுக்கு காய்ச்சலும், வாய் மற்றும் கால் பகுதியில் கொப்பளங்களும் ஏற்படும். இதனால் கால்நடைகள் தீவனங்களை சாப்பிடாமல், நடக்க முடியாமலும் சிரமப்படும்.
காற்றின் மூலம் பரவக்கூடும் நோய் என்பதால், கோமாரி பாதித்த கால்நடைக்கு அருகில் உள்ள விலங்குகளுக்கு எளிதாக பரவும். இதில், நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும் கால்நடைகள் உயிரிழக்கும். இதை தவிர்க்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆண்டுதோறும் 2 முறை கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த சில வருடங்களாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் உயிரிழக்கவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி வரும் 16ம் தேதி முதல் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கோட்டத்தில், 6 ஒன்றியங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்த ஏதுவாக, 2 நடமாடும் கால்நடை மருந்தகங்கள், 31 கால்நடை மருந்தகம், தலா ஒரு கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை பெரு மருத்துவமனை, 3 ஆம்புலன்ஸ்கள் மூலமாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி மண்டல இணை இயக்குநர் லதா (பொ) தலைமையில், துணை இயக்குநர் அழகுவேல், உதவி இயக்குநர் கந்தசாமி ஆகியோர் மேற்பார்வையில் 32 டாக்டர்கள், 9 கால்நடை ஆய்வாளர்கள், 24 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். முகாம் நடைபெற உள்ள பகுதிகளின் விபரங்கள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தவறாமல் முகாமில் பங்கேற்று தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடைத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.