/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
தியாகதுருகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : அக் 09, 2024 04:22 AM

தியாகதுருகம் : தியாகதுருகம் வழியே செல்லும் சேலம் -- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. அவற்றை அகற்றி சாலை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் உதயமாம்பட்டு சாலை சந்திப்பு இடத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றக்கோரி சையத் அபாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெடுஞ்சாலைத்துறை கள ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அங்கு கட்டடம் கட்டி இருந்த அங்கம்மாள், வெங்கடேசன், ராஜேந்திரன் ஆகியோர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்ய முயன்றனர்.
அவர்களை அப்புறப்படுத்திய போலீசார் கூடுதல் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தினர்.