/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புறவழிச்சாலையில் போதை ஆசாமிகளால் விபத்து அபாயம்
/
புறவழிச்சாலையில் போதை ஆசாமிகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 11, 2025 07:01 AM

தியாகதுருகம்; தியாகதுருகம் புறவழிச்சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையால் போதை ஆசாமிகள் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி அடாவடி செய்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தியாகதுருகம், புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே இருந்த டாஸ்மாக் கடை அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக இருந்ததால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இது குறித்து 'தினமலர்'நாளிதழில், செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கடந்த 2 மாதங்களுக்கு முன் தியாகதுருகம் மேற்கே புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலைக்கு டாஸ்மாக் கடை மாற்றப்பட்டது.
தினமும் கடை திறக்கப்பட்டது முதல் இரவு மூடும் வரை மது பாட்டில் வாங்க வரும் ஆசாமிகள் தங்களின் வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். சிலர் பாட்டில்களை வாங்கி அருகில் உள்ள வயலில் திறந்த வெளி 'பார்' போல் அமர்ந்து குடிக்கின்றனர்.
இதனால் சாலையில் குடிமகன்களால் நிறுத்தப்படும் வாகனங்கள் பல மணி நேரமாக போக்குவரத்திற்கு பாதிப்பாக உள்ளது. சைக்கிள், பைக், ஆட்டோ, கார் என அனைத்து வாகனங்களும் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.
சிலர் போதை அதிகமாகி சாலையிலேயே நின்று கொண்டு ரகளையில் ஈடுபடுவதும் ஓடி, பிடித்து விளையாடுவதுமாக அடாவடியில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு தொந்தரவு செய்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருக்கும் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் இவ்வழியே அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களில் போதை ஆசாமிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வயல்வெளி வழியே புதிதாக அமைக்கப்பட்ட இச்சாலை 7 அடி உயரத்தில் உள்ளது. இக்காரணங்களால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் டாஸ்மாக் கடை அருகே மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அசம்பாவிதம் நிகழும் முன் உடனடியாக வேறு இடத்திற்கு கடையை மாற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.