/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை தேவை! திருக்கோவிலுாரில் மக்கள் எதிர்பார்ப்பு
/
மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை தேவை! திருக்கோவிலுாரில் மக்கள் எதிர்பார்ப்பு
மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை தேவை! திருக்கோவிலுாரில் மக்கள் எதிர்பார்ப்பு
மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை தேவை! திருக்கோவிலுாரில் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 25, 2025 06:41 AM

திருக்கோவிலுார் உட்கோட்டத்தில் மூங்கில்துறைபட்டில் துவங்கி திருக்கோவிலுாரை கடந்து தென்பெண்ணையாறு ஓடுகிறது. 'பெஞ்சல்' புயல் காரணமாக மணல் குவிந்து, நிலத்தடி நீரை மேம்படுத்தும் இயற்கையின் சமநிலைப்பாடு நீடிக்க துவங்கி இருக்கிறது.
சமூக விரோதிகள் சிலர், ஆற்று மணலை சுரண்டும் பணியில் களமிறங்கி உள்ளனர். குறிப்பாக, முடியனுார் தென்பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் ஜே.சி.பி., இயந்திரம் லாரிகளில் மணல் கொள்ளை நடக்கிறது.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனாலும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக புகார் தெரிவிப்பவர்கள் மிரட்டப்படும் சம்பவம் அரங்கேறுகிறது.
மணல் கொள்ளை நடக்கும் பகுதியில், முடியனுார் மற்றும் 8 வழியோர குடியிருப்பு கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்; பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு தண்ணீர் அனுப்பும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.
இதன் அருகிலேயே, பல மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மணல் கடத்துவது ஜோராக நடக்கிறது. மணலுார்பேட்டை அடுத்த சித்தப்பட்டிணம் ஏரியில் பட்டப்பகலில் ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக கிராவல் மண் தோண்டப்பட்டு, லாரி மற்றும் டிப்பர்களில் கடத்தப்படுகிறது.
மணலுார்பேட்டை பகுதியில் பல ஏரிகளில் தண்ணீர் வற்றி வரும் நிலையில், செங்கல் சூளை, அரசின் சாலை பணி எனக்கூறி கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மணல் கடத்தப்படுகிறது. விளந்தை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றிலும் மணல் கடத்தல் அதிகமாக நடக்கிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'சட்டம் ஒழுங்கு பிரச்னைக்காக இரவு பகலாக ரோந்து பணியை தீவிரப்படுத்தும் போலீசாருக்கு, கனிம வள கொள்ளையை மட்டுமே தெரிந்தும் கண்டு கொள்வதில்லை.
கனிமவள அதிகாரிகள் கடமைக்காக ஒரு சில லாரிகளை மட்டும் குறி வைத்து பிடிக்கும் நிலையில், பட்டப் பகலில் அரங்கேறி வரும் மணல் கொள்ளையை அப்படியே விட்டு விடுகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர்கள் மூலமாக கிராமத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் வருவாய்த்துறையினர் கண்காணிக்கின்றனர். ஆனால் இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
இதற்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்' என்றனர்.