/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புரோக்கர்கள் தடையின்றி கிராவல் மண் அள்ளுவதாக... குற்றச்சாட்டு: வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு கடும் கட்டுப்பாடு
/
புரோக்கர்கள் தடையின்றி கிராவல் மண் அள்ளுவதாக... குற்றச்சாட்டு: வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு கடும் கட்டுப்பாடு
புரோக்கர்கள் தடையின்றி கிராவல் மண் அள்ளுவதாக... குற்றச்சாட்டு: வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு கடும் கட்டுப்பாடு
புரோக்கர்கள் தடையின்றி கிராவல் மண் அள்ளுவதாக... குற்றச்சாட்டு: வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு கடும் கட்டுப்பாடு
ADDED : நவ 01, 2025 02:56 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும், புரோக்கர்கள் எவ்வித இடையூறு இன்றி கிராவல் மண் எடுத்து செல்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், டி.ஆர்.ஓ., ஜீவா, வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், வேளாண் துணை இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜோதிபாஸ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;
வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்படும் மானியத்தில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். சாலையில் காயவைக்கப்படும் மக்காச்சோள பயிரால் விபத்து அபாயம் உள்ளது, எனவே அனைத்து வேளாண் அலுவலகத்திலும் சோளம் காய வைக்கும் இயந்திரம் அமைக்க வேண்டும், இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
மீன் வளர்ப்புக்காக ஏரிகள் ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு களை எடுக்கும் பணிகளை ஒதுக்க வேண்டும். நெல், மக்காச்சோளம், உளுந்து பயிருக்கு வழங்கப்படும் காப்பீடு தொகை போதுமானதாக இல்லை. இயற்கை இடர்பாட்டின் போது 33 சதவீத பயிர்கள் சேதமடைந்திருந்தாலே முழு காப்பீடு தொகையும் வழங்க வேண்டும். அறக்கட்டளை, தொண்டு நிறுவனம் என்ற பெயரில் உலாவும் நபர்கள், மத்திய, மாநில அரசின் திட்டங்களின் கீழ் சலுகை வாங்கி தருவதாக கூறி மக்களிடம் பணம் பறிக்கின்றனர். அதனை தடுக்க வேண்டும். புதுப்பட்டு கிராமத்தில் சாலை ஓரங்களிலேய உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்,
குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் புகார் மனு மீது உரிய நடவடிக்கை இல்லை. மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் காட்டுபன்றிகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த வேண்டும்.
கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதில்லை. மாவட்டத்தில் விதை சோதனை ஆய்வகம் அமைக்க வேண்டும். கடந்த ஆண்டு பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட ஒரு சில விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணத்தொகை கிடைக்கவில்லை உட்பட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்து விவசாயிகள் பேசினர்.

