/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சமுதாய வள பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
சமுதாய வள பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 19, 2025 03:21 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருத்தல் வேண்டும். சுய உதவிக் குழுவில் குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராகவும், மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
மொபைல் செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும். சுய உதவிக் குழு வாராக்கடன் நிலை இருக்க கூடாது. அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணி செய்ய கூடாது.
விண்ணப்பதாரர், தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். மேற்கண்ட தகுதிகள் உடைய நபர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 21ம் தேதிக்குள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம், நிறைமதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம்- 606213 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.