/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிகள் தீவிரம்
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிகள் தீவிரம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிகள் தீவிரம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஏற்பாடு! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிகள் தீவிரம்
ADDED : பிப் 03, 2025 10:48 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கோடைகாலத்தில் மானாவாரி மற்றும் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழை ஓரளவு கை கொடுப்பதால், பெரும்பாலான விவசாயிகள் ஒரு போகம் மட்டும் நெல் சாகுபடி செய்கின்றனர்.
கடந்தாண்டு 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது.
இதனால் பல விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். தற்போது, நெல் அறுவடை காலம் துவங்கியுள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.
கடந்தாண்டு 22 நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டது. நடப்பாண்டு மழை காரணமாக நெல் பயிர் சாகுபடி அதிகரித்துள்ளதால் மாவட்டத்தில் 30 முதல், 35 வரை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதில், நெல் அறுவடை அதிகம் நடைபெறும் இடங்களில் ஒரு வாரத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு, நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடியாக பதிவு செய்தும், ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தும் டோக்கன் பெற்று, அறிவிக்கப்பட்ட தேதியில் நெல் கொண்டு வரலாம்.
ஈரப்பதம் 17 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும். சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகலை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு குவிண்டால் (100 கிலோ) சன்ன ரக நெல் குறைந்த பட்ச ஆதார விலையாக (மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.130 சேர்த்து) 2,450 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதேப் போன்று, குண்டு ரக நெல் (மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.105 சேர்த்து) 2,405 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நெல் கொள்முதல் செய்ததில் இருந்து 3 நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும்.