/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணிமுக்தா அணையில் தண்ணீரை தேக்க... ஏற்பாடு; ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி ஒத்திவைப்பு
/
மணிமுக்தா அணையில் தண்ணீரை தேக்க... ஏற்பாடு; ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி ஒத்திவைப்பு
மணிமுக்தா அணையில் தண்ணீரை தேக்க... ஏற்பாடு; ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி ஒத்திவைப்பு
மணிமுக்தா அணையில் தண்ணீரை தேக்க... ஏற்பாடு; ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி ஒத்திவைப்பு
ADDED : அக் 29, 2025 08:13 AM

கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் பருவ மழைக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாது என அறிவித்த நிலையில், தற்போது மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கும் பணி துவங்கி இருப்பதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை உள்ளது. இதில் சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 36 அடி உயரம் (796.96 மில்லியன் கனஅடி) கொள்ளளவு கொண்டது. வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் கல்வராயன்மலையில் பெய்யும் மழைநீர் மணி மற்றும் முக்தா நதிகளின் வழியாக அணைக்கு வருகிறது.
இதுதவிர மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவு உயரும். அணையில் இருந்து ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்ற மூன்று பழைய ஷட்டர்கள் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பகுதியில் புதியதாக 4 ஷட்டர்கள் அமைக்கப்பட்டது.
அணையின் மொத்த கொள்ளளவு 36 அடியில் 34 அடிக்கு நீர் மட்டம் உயரும் பட்சத்தில் மெயின் ஷெட்டர்கள் மூலம் ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றுப்படும். தொடர்ந்து ஆறுகளின் தடைப்பணைகள் நிரம்பி வழிந்தோடும் போது சுற்று வட்டார ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டு வருகிறது.
அணையிலிருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் பாசன கால்வாய் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். அதன் மூலம் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5,496 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
இந்நிலையில் அணையில் உள்ள பழைய ஷட்டர்கள் வலுவிழந்து, தண்ணீர் தாங்கும் திறன் முற்றிலுமாக இழந்தது. நீர் தேக்கத்தின் போது ஷட்டர்களில் இருந்து அதிகளவில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி ரூ. 20.76 கோடி மதிப்பில் ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் தற்போது பெய்யும் பருவ மழைக்கு அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த மழையில், அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் பழைய ஷட்டர்கள் வழியாக ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் தண்ணீர் வீணானது.
இதற்கு பாசன விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. பழைய ஷட்டர்களில் நீர் பிடிப்பு தாங்கும் திறன் வரை அணையில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். பருவ மழைக்கு பின்பு கோடை காலங்களில் ஷட்டர்கள் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளுமாறும், விவசாயிகளின் நலனை கருதி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் பழைய ஷட்டர்கள் மூடப்பட்டு மீண்டும் தண்ணீர் தேக்கி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அணைக்கு தற்போது நீர் வரத்தாக 300 கன அடி உள்ள நிலையில், தற்போது 14 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும், பழைய ஷட்டர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால் மணிமுக்தா அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

