/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனியார் ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி செல்ல தடை: மீறினால் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை
/
தனியார் ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி செல்ல தடை: மீறினால் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை
தனியார் ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி செல்ல தடை: மீறினால் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை
தனியார் ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி செல்ல தடை: மீறினால் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஆக 26, 2024 05:20 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பதிவு செய்த மற்றும் பதிவில்லாத கரும்புகளை தனியார் ஆலைகளுக்கு ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரசாந்த் எச்சரித்துள்ளார்.
கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முழு அரவைக்கு ஆண்டு தோறும் 4.30 லட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு தேவைப்படுகிறது.
ஆனால், நடப்பு பருவத்தில் (2023-24) வறட்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 2023-24 சிறப்பு பருவம் மற்றும் 2024-25 முதன்மை அரவைப் பருவத்திற்கு, 3.25 லட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவு மற்றும் பதிவில்லாத கரும்புகளை இடைத்தரகர்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக, தன்னிச்சையாக வெட்டி கடத்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்குத் தேவையான கரும்பு மேலும் குறையும் நிலை உருவாகும்.
சர்க்கரைத்துறை ஆணையர் செயல்முறையில், கரும்பு கட்டுப்பாடு ஆணைப்படி ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பதிவு மற்றும் பதிவில்லாத கரும்பை இதர ஆலைகளுக்கு எடுத்து செல்வது, கரும்பு கட்டுப்பாட்டு சட்டம்-1966, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 மற்றும் தமிழ்நாடு சர்க்கரை ஆலைகளுக்கான விதிகள் மற்றும் சட்டம் 1949-ன் படி தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட கரும்புகள் எடுப்பதை தனியார் சர்க்கரை ஆலைகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் வருவாய் வசூல் செய்யும் பிரிவின் கீழ் சம்மந்தப்பட்ட ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கரும்புகளை எடுத்து வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், ஆலை அங்கத்தினர்கள் கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைக்கு விற்காமல், கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்க வேண்டும். அந்தந்த ஆலைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனவும் கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.