/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் அதிகரித்துள்ள பேனர் கலாசாரம்
/
திருக்கோவிலுாரில் அதிகரித்துள்ள பேனர் கலாசாரம்
ADDED : டிச 16, 2024 11:14 PM

திருக்கோவிலுாரில் அதிகரித்துள்ள பேனர் கலாசாரத்தால் பொதுமக்கள் மட்டுமல்லாது, போலீசாரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருக்கோவிலுார் நகராட்சி பரந்து விரிந்த பகுதியாகும். கிழக்கே சைலோமில் துவங்கி, மேற்கே கீரனுாரும், தெற்கில் அரும்பாக்கம் வரையிலும் எல்லை நீள்கிறது. இப்பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை போலீசார் கண்காணிப்பது அவ்வளவு எளிதல்ல. நகரில் நடக்கும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கும் விதமாக காவல்துறை சார்பில் நகர் முழுதும் 64 கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் முழு கட்டுப்பாட்டு அறை காவல் நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனை 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து குற்ற சம்பவங்களை பெரும் அளவில் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு இடையூறாக சமீப நாட்களாக புது விதத்தில் சிக்கல் முளைத்துள்ளது. நகரின் முக்கியமான சந்திப்புகளான ஐந்து முனை சந்திப்பு, 4 முனை சந்திப்பு, பஸ் நிலையம், ஏரிக்கரை மூலை, சந்தைப்பேட்டை தீயணைப்பு நிலைய சந்திப்பு, பைபாஸ் அய்யனார் கோவில் என முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்படுகிறது. இதில், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள், கடை திறப்பு விழா, கடைக்காரர்களின் சிறப்பு விற்பனை மற்றும் தனி நபர்கள் நினைவஞ்சலி, திருமண நிகழ்ச்சிகள், மஞ்சள் நீர் என பல்வேறு வகைகளில் பேனர்கள் வைக்கும் கலாசாரம் பெருகிப்போனது.
இவ்வாறு வைக்கப்படும் பேனர்களால் கண்காணிப்பு கேமராக்கள் மறைக்கப்படுகிறது. இதனால் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து பொது இடங்களை போலீசார் கண்காணிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதன் நோக்கமே சிதைந்துள்ளது. கடையை மறைத்து பேனர் வைப்பதால் கடைக்காரர்களும் வியாபாரத்தை இழக்கின்றனர்.
பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், காற்றின் வேகத்தில் பேனர் சாலையில் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் ஒரு பக்கம் இடையூறு என்றால் இது போலீசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்து இருக்கும் நிலையில் அவர்களும் அரசியல் தலையீடு காரணமாக ஒதுங்கிக் கொள்கின்றனர்.
அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்திற்கு தீர்வு காண வேண்டியது காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும், இதனை எல்லாம் கண்காணிக்க வேண்டியது வருவாய் துறையின் பொறுப்பும் ஆகும். இதில் எந்த துறையும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் வேதனையான விஷயம்.

