/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் அருகே மாட்டிறைச்சி கூடம்; பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு தேவை
/
தியாகதுருகம் அருகே மாட்டிறைச்சி கூடம்; பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு தேவை
தியாகதுருகம் அருகே மாட்டிறைச்சி கூடம்; பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு தேவை
தியாகதுருகம் அருகே மாட்டிறைச்சி கூடம்; பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு தேவை
ADDED : பிப் 03, 2025 10:47 PM
தியாகதுருகம்; தியாகதுருகம் அருகே சுகாதாரமற்ற வகையில் இயங்கும் மாட்டிறைச்சி கடைகளை ஒழுங்குப்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாகதுருகம் பஸ் நிலையம் எதிரே உள்ள மேல் பூண்டி தக்கா ஏரி கரையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மாட்டிறைச்சி கடைகள் இயங்கின. இப்பகுதியில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடக்கும்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இங்கு சுகாதாரமற்ற வகையில் மாட்டிறைச்சிக் கடைகள் இயங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாட்டிறைச்சி கழிவுகளை அருகில் உள்ள மேல் பூண்டி தக்கா ஏரியில் வீசியதால் தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசியது.
மாட்டிறைச்சி கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வடக்கு பகுதியில் ஒதுக்குப் புறமான இடத்திற்கு கடைகள் மாற்றப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், தியாகதுருகம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பிரதிவிமங்கலம் ஊராட்சி அலுவலகம் எதிரே 100 ஆண்டிற்கு முன் பயன்பாட்டில் இருந்த தஞ்சாவூரான் பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு ரூ. 11 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி முடிந்து போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது.
ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்ட மாட்டிறைச்சி கூடத்தையொட்டி புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் இப்பகுதியில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும்.
திறந்த வெளியில் மாடுகளை வெட்டுவது அவ்வழியே செல்லும் மக்களை முகம் சுளிக்க செய்யும்.
எனவே, மாட்டிறைச்சி கடைகள் மக்களுக்கு இடையூறின்றி செயல்படும் வகையில் மறைவாக கூடம் அமைத்து கொடுப்பது நிரந்தர தீர்வாக அமையும்.
அதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

