/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மீண்டும் மரங்கள் வளர்த்து இயற்கை காடுகள் உருவாக்கப்படுமா?: சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை தேவை
/
மீண்டும் மரங்கள் வளர்த்து இயற்கை காடுகள் உருவாக்கப்படுமா?: சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை தேவை
மீண்டும் மரங்கள் வளர்த்து இயற்கை காடுகள் உருவாக்கப்படுமா?: சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை தேவை
மீண்டும் மரங்கள் வளர்த்து இயற்கை காடுகள் உருவாக்கப்படுமா?: சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை தேவை
ADDED : அக் 25, 2024 06:59 AM
தியாகதுருகம்: மாவட்டத்தில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தரைக்காடுகளில் அழிக்கப்பட்ட அரிய வகை மரங்களை மீண்டும் வளர்ப்பதன் மூலம் இயற்கை வளத்தை மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையான கல்வராயன்மலை 600 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் தொடங்கி கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலுார், ரிஷிவந்தியம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை வரை தரை காடுகள் உள்ளன.
இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கையான காடுகளாக மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. வனவிலங்குகளும் இங்கு அதிக அளவில் வாழ்ந்து வந்தன.
சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் இயற்கை காடுகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டு அதில் வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது. இங்கிருந்த அரியவகை விலங்கினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.
உயிர் தப்பிய மான், முயல், மயில், காட்டுப்பன்றி, நரி ஆகிய விலங்குகள் மட்டும் பாதுகாப்பின்றி போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன.
இங்கிருந்து யூகலிப்டஸ் மரங்கள் ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் அறுவடை செய்யப்பட்டு பேப்பர் உற்பத்திக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மரங்கள் முழுவதையும் அழித்துவிட்டு மீண்டும் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
இதற்காக வனப்பகுதியை விளை நிலங்களைப் போல் டிராக்டர் மூலம் உழுது சமன்படுத்தி அதன் பின்னரே கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இயற்கை காடுகளில் இருந்த அரிய வகை தாவரங்கள், மரங்கள், மூலிகைச் செடிகளும் முற்றிலும் அழிக்கப்பட்டது.
காடுகளில் பெய்யும் நீர் ஓடைகள் வழியே அருகில் உள்ள ஏரிகளுக்கு சென்று நிரம்பும் வகையில் அக்காலத்தில் நீர் கட்டமைப்பு இருந்தது.
யூகலிப்டஸ் மரங்கள் வளர்ப்புக்காக காடுகளை சுற்றி 5 அடி உயரத்திற்கு கரைகளை எழுப்பி தண்ணீர் வெளியே செல்லாமல் தடுக்கப்பட்டதன் காரணமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்ப முடியாமல் ஆண்டுதோறும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
இயற்கை காடுகளில் உள்ள மரங்களை முழுதும் அழித்ததால் பருவநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு மழைப்பொழிவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.
தொடர்ந்து வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா என பொதுமக்கள், விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தரைக்காடுகளில் அழிக்கப்பட்ட அரிய வகை மரங்களை மீண்டும் வளர்ப்பதன் மூலம் இயற்கை வளத்தை மீட்டெடுக்க முடியும்.
அதேபோல் ஆண்டு தோறும் போதிய மழைப் பொழிவு கிடைப்பதற்கு இயற்கை காடுகள் கை கொடுக்கும். வியாபார நோக்கில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி தன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்கிறது.
இதனால் பருவ மழை சீராக பெய்யாமல் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் நிலையும் உருவாகிறது.
மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க அழிக்கப்பட்ட காடுகளை மீண்டும் உருவாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.