/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் கால்நடை சந்தையால் விபத்து அபாயம்: வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய கோரிக்கை
/
தியாகதுருகத்தில் கால்நடை சந்தையால் விபத்து அபாயம்: வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய கோரிக்கை
தியாகதுருகத்தில் கால்நடை சந்தையால் விபத்து அபாயம்: வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய கோரிக்கை
தியாகதுருகத்தில் கால்நடை சந்தையால் விபத்து அபாயம்: வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய கோரிக்கை
ADDED : ஏப் 18, 2025 05:07 AM

தியாகதுருகம் பஸ் நிலையத்தை ஒட்டி சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதன் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பஸ் நிலையம் அருகே அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
அதை ஒட்டியுள்ள மேல்பூண்டி தக்கா ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் ஆடு, மாடுகளை விற்பனை செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் வெளியூரில் இருந்து ஏராளமான வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு கால்நடைகளை வாங்க வருவதால் கூடுதல் விலை கிடைத்து விவசாயிகள் லாபம் அடைகின்றனர்.
சந்தை நடைபெறும் சனிக்கிழமையில் பெரும்பாலான கால்நடைகளை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி விற்பனை செய்கின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதேபோல கால்நடைகளை கொண்டு செல்வதற்கு வரும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் அதிக அளவில் கால்நடைகள் வருவதால் இங்கு
கடும் நெரிசல் ஏற்படுகிறது. அபாயகரமான ஏரிக்கரை வளைவு பகுதி என்பதால் இங்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
குறிப்பாக இரவு நேரத்தில் இங்கு போதிய விளக்கு வெளிச்சம் இல்லாததாலும், மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும் விபத்து அபாயம் தொடர் கதையாகி வருகிறது.
சுகாதார சீர்கேடு
அதேபோல, கால்நடைகளின் கழிவுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இவை மேல்பூண்டி தக்கா ஏரியில் கலப்பதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.இந்த பிரச்சினைக்கு தீர்வாக கால்நடை சந்தையை மட்டும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அத்தியாவசிய பொருட்களை மட்டும் பஸ் நிலையம் அருகே தற்போது உள்ள இடத்திலேயே விற்பனை செய்வதால் வெளியூர் மக்கள் வந்து வாங்கி செல்ல வசதியாக இருக்கும்.
கால்நடை விற்பனை செய்வதற்கு வசதியாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.
அதேபோல் தற்போது உள்ள இடத்தில் நெரிசல் குறைந்து போக்குவரத்து பாதிப்பின்றி விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும்.
அனைத்து வகையிலும் இடையூறாக உள்ள கால்நடை சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.