/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டையில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுது: திருட்டுகளை தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்
/
உளுந்துார்பேட்டையில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுது: திருட்டுகளை தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்
உளுந்துார்பேட்டையில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுது: திருட்டுகளை தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்
உளுந்துார்பேட்டையில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுது: திருட்டுகளை தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்
ADDED : நவ 27, 2025 05:04 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பகுதியில் போலீசார் அமைத்த சி.சி.டி.வி., கேமராக்கள்பராமரிப்பு இன்றி பழுதாகி கிடப்பதால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, சேலம், திருச்சி, மதுரை, வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப்பகுதி உள்ளது. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்லும் முக்கிய பகுதி. இப்பகுதியில் பைக் திருட்டு, வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர் கதையாகி உள்ளது.
திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமலும், திருட்டை தடுக்க முடியாமல் உளுந்துார்பேட்டை போலீசார் திணறி வருகின்றனர். இதனால், திருட்டு சம்பவங்களை தடுக்க வியாபாரிகள், நகைக்கடைகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். அதன்பேரில் ஒரு சில வியாபாரிகள், நகை கடை உரிமையாளர்கள் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
இதுதவிர, நகரின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த ஏற்பாடு செய்தனர். ரோட்டரி சங்கத்திடம் போலீசார் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 2018-- 19ம் ஆண்டில் உளுந்துார்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 1.25 லட்சம் மதிப்பீட்டில் 16 சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம், திருவெண்ணெய்நல்லுார் சாலை சந்திப்பு, விருத்தாசலம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில் பொருத்தப்பட்டது.
இந்த சி.சி.டி.வி., கேமராக்களை அப்போதைய வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன், எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் சில மாதங்களில் பராமரிப்பு இன்றி சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதாகி காட்சி பொருளாக மாறியது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு, உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி.,யாக மணிமொழியன் இருந்தபோது உளுந்துார்பேட்டை நகர மற்றும் உட்கோட்ட பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் 300க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் போலீசார் அமைத்தனர். அதன்பிறகு, சரியாக பராமரிக்காததால் சி.சி.டி.வி., கேமராக்கள் அனைத்தும் பழுதாகி செயல்படாமல் போனது. இதற்காக போலீஸ் செலவிட்ட மொத்த தொகையும் வீணானது.
சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதால் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகளை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மர்ம ஆசாமிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
இதனால் திருட்டு ஆசாமிகளை கண்டுபிடிக்க முடியாமலும், குற்றங்களை தடுக்க முடியாமலும் போலீசார் விழிப்பிதுங்கி நிற்கின்றனர். சி.சி.டி.வி., கேமரா இல்லை என்ற தைரியத்தில், உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சமீபத்தில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இது வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் திருட்டு சம்பங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாமல், ஒரு சில புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிந்து வருகின்றனர். எனவே போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், புதிதாக சி.சி.டி.வி., கேமரா பொருத்துவதுடன், தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

