/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு
/
உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 16, 2025 11:49 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உழவர் சந்தையின் செயல்பாடு குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த காய்கறி, கீரை வகைகள், பழம், வாழை இலை உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உழவர்சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், உழவர் சந்தையின் செயல்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உழவர் சந்தையின் உட்புற கடைகள், வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை விபரம், குளிர்பதன கிடங்கின் செயல்பாடு, கடைகளின் எண்ணிக்கை, காய்கறிகள் விற்பனை தொடர்பாக கேட்டறிந்தார். தொடர்ந்து, உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கினை பயன்படுத்திக்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. உடன் உழவர் சந்தை கண்காணிப்பாளர் இசைசெல்வன் மற்றும் அலுவலர்கள் பலர் இருந்தனர்.